×

நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.. கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும் : பிரதமர் மோடி சூளுரை

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,” இந்திய ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். புதிய எம்.பி.க்கள் அனைவரையும் வரவேற்கிறேன்; அவர்களுக்கு வாழ்த்துகள்.புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை தொடங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. இந்நாளை கொண்டாடும் வாய்ப்பை நாடாளுமன்ற வளாகம் பெற்றுத் திகழ்கிறது. எங்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மக்கள் எங்களுக்கு 3வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். 68 கோடி மக்கள் தேர்தலில் வாக்களித்து சாதனை படைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய தேர்தல்பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்.

ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம்; நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம். அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும். நாட்டுக்கு சேவையும் 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். இந்த மக்களவையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 3ஆவது முறையாக பிரதமராகி இருக்கிறேன், அனைத்து திட்டங்களுக்கும் 3 மடங்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 2 முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.

2047ல்ல வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும். எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி ஒரு கறுப்பு தினம். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம்” இவ்வாறு பேசினார்.

The post நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.. கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும் : பிரதமர் மோடி சூளுரை appeared first on Dinakaran.

Tags : PM Modi Sulurai ,New Delhi ,Narendra Modi ,Indian ,M. ,PM Modi ,Sulurai ,
× RELATED அரசு முறைப் பயணமாக ஜூலை 8-ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி