×

ஏற்காடு, ஒகேனக்கல், கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் குவிந்த பயணிகள்

ஏற்காடு: தமிழகத்தில் மீண்டும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை தினமான இன்று சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் ஒகேனக்கல் மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் ஜூலை மாதத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷண நிலையாக மாறியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

கோடை காலத்திற்கு இணையாக மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. பல இடங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெயிலின் தாக்கம் தணிந்து பலத்த காற்று வீசும். ஆனால், அதற்கு மாறாக தற்போது பகல்நேரங்களில் சூரியன் சுட்டெரித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடுத்த ஒரு வாரத்திற்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே சுற்றுலாப்பயணிகள் கார், டூவீலர்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரிபூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோயில், பொட்டானிக்கல் கார்டன், லேடிஸ்சீட் போன்ற இடங்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர். மேலும் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

இதேபோல் மேட்டூர் அணை பூங்காவிலும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. காவிரி ஆற்றில் வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்த அவர்கள், முனியப்பன் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு வணங்கி, சமைத்து சாப்பிட்டனர். தொடர்ந்து அங்குள்ள பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரியின் அழகை ரசித்ததுடன், முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவி வரும் இதமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களான நேற்றும், இன்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், நட்சத்திர ஏரி, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வரும் நாட்களில் ஓணம் பண்டிகை, சுதந்திர தின விழாவிற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஏற்காடு, ஒகேனக்கல், கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் குவிந்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ogenakal ,Kodaikanal ,Tamil Nadu ,Salem ,District ,Recognize ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...