×

27 மாநிலங்களில் 508 ரயில் நிலையங்களில் நவீன வசதி திட்டம்; தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் சீரமைப்பு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 27 மாநிலங்களில் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘அம்ரித் பாரத்’ நிலைய திட்டத்தின் கீழ் 1,309 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய அமைச்சரவை கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தமிழகம் உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 508 ரயில் நிலையங்களில் ரூ.24,470 கோடி மதிப்பில் அடுத்த 2 ஆண்டுகளில் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஒன்றிய ரயில்வே துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்ட்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 14 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படுகிறது. இத்திட்டப் பணிகளை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு ரயில் நிலையம் ரூ.18 கோடியிலும், பெரம்பூர் – ரூ.15 கோடி, கூடுவாஞ்சேரி – ரூ.21 கோடி, திருவள்ளூர் – ரூ.16 கோடி, திருத்தணி – ரூ.11 கோடி, கும்மிடிபூண்டி – ரூ.17 கோடி, அரக்கோணம் – ரூ.22 கோடி, ஜோலார்பேட்டை – ரூ.16 கோடி, சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் – ரூ.45 கோடி, கரூர் – ரூ.34 கோடி, திருப்பூர் – ரூ.22 கோடி, போத்தனூர் – ரூ.24 கோடியிலும் சீரமைக்கப்படுகிறது.

மதுரை கோட்டத்திற்கு உட்பட தென்காசி ரயில் நிலையம்- ரூ.17 கோடியிலும் விருதுநகர் – ரூ.25 கோடி. திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை – ரூ.20 கோடி, தஞ்சாவூர் – ரூ.23 கோடி, விழுப்புரம் – ரூ.24 கோடி, புதுச்சேரி – ரூ.93 கோடி, நாகர்கோவில் – ரூ.11 கோடியிலும் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. அதாவது லிப்ட் வசதி, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும். மேலும் மேற்கண்ட ரயில் நிலைய கட்டிடங்களின் வடிவமைப்பானது உள்ளூர் கலாசாரம், பாரம்பரியத்தை போற்றும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் திட்டப்பணிக்களுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ‘நாடு முழுவதும் 1,300 முக்கிய ரயில் நிலையங்கள், அமிர்த பாரத் ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும். நவீன முறையில் மேம்படுத்தப்படும். முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் ரூ.25,000 கோடி செலவிடப்படும். அப்பணிகள் யாவும் முடிவுற்ற பின், சாமானிய மக்களுக்கு ரயில்வே எவ்வளவு உந்துசக்தியாக இருக்கும் என்பதை பார்க்க முடியும்.

இன்றைய நிலையில் உலகின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியாவின் மீது திரும்பி உள்ளது. இந்தியாவின் மதிப்பு உலக அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலக நாடுகளின் அணுகுமுறையும் மாறிவிட்டது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கூறமுடியும். அதாவது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெரும்பான்மை பலம் கொண்ட ஒன்றிய அரசை மக்கள் தேர்வு செய்தது, மேலும் அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அரசானது, சவால்களை எதிர்கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது ஆகிவற்றை குறிப்பிட முடியும்.

எங்களது அரசு நவீன முறையில் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியது. ஜனநாயகத்தின் சின்னமான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ராணுவ வீரர்களுக்கான தேசிய போர் நினைவிடத்தை கட்டினோம். உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை சிலையை கட்டினோம். அதனை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். ஆனால் சில கட்சிகளின் பெரிய தலைவர்கள் கூட, அந்த சிலையை இன்னும் பார்வையிடவில்லை. எதிர்மறையான அரசியலை புறம் தள்ளிவிட்டு, நேர்மறையான அரசியல் பாதை நோக்கி முன்னோக்கி செல்வோம். ஆகஸ்ட் 9ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள்; அந்த நாளில் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது.

‘வெள்ளையனே வெளியேறு’ என்ற மந்திரத்தை மகாத்மா காந்தி அறிவித்தார். சுதந்திரத்தை அடைவதற்கான புதிய ஆற்றலை இந்த மந்திரம் வழங்கியது. அதேபோல் அனைத்து தீமைகளையும் வெளியேற்றும் விதமாக ‘வெளியேறு இந்தியா’ என்ற கோஷத்தை மக்கள் எழுப்பி வருகின்றனர். ஊழல், வாரிசு அரசியல், திருப்திப்படுத்தல் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் ஒரே குரலாக ஒலிக்கின்றனர்’ என்று பேசினார்.

The post 27 மாநிலங்களில் 508 ரயில் நிலையங்களில் நவீன வசதி திட்டம்; தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் சீரமைப்பு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,New Delhi ,Modi ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?