×

நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் பங்களாவில் சுற்றுலா பயணிகளை கவரும் அருங்காட்சியகம் ஒரே மாதத்தில் 3,000 பேர் கண்டு ரசிப்பு

ஊட்டி, ஆக.6: ஊட்டி அரசு கலை கல்லூரி அருகேயுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இதில் பழங்குடியின மக்களான கோத்தர், தோடர், குறும்பர் மற்றும் பனியர் போன்ற பழங்குடியின மக்கள் வசித்த வீடுகளின் மாதிரி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் அரிய வகை புகைப்படங்கள், ஓவியங்கள், பழங்காலத்து சிலைகள் பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், வன விலங்குகள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓலை சுவடிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட கனிமங்கள், புதைப்படிவங்கள், கல்மரம் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினம், குழந்தைகள் தினம், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட போன்ற முக்கிய தினங்களில் கண்காட்சி, போட்டிகள் போன்றவைகள் நடத்தப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் அதிகளவு பார்வையிட்டு செல்கின்றனர். இதன் தொடர்ச்சியாக புகைப்படங்கள் அக்ரலிக் கேன்வாஸ் பெய்ன்ட்டிங்கில் வரையப்பட்ட நீலகிரியை கண்டறிந்த ஜான் சலிவன், பிரிக்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நீலகிரியின் இயற்கை எழில் கொஞ்சும் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

ஊட்டி அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறுகையில்,“ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்திருந்தனர்’’ என்றார்.

The post நூற்றாண்டு பழமை வாய்ந்த கல் பங்களாவில் சுற்றுலா பயணிகளை கவரும் அருங்காட்சியகம் ஒரே மாதத்தில் 3,000 பேர் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Government Arts College ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்