×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் துவங்கியது

தூத்துக்குடி, ஆக. 6: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று துவங்கியது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப். 15ம் தேதி துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து தகுதியான குடும்பத்தலைவிகளை தேர்வு செய்வதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம் அனைத்து ரேஷன் கடை பகுதிகளிலும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஜூலை 24ம் தேதி முதல் துவங்கிய முதற்கட்ட முகாம் நேற்று முன்தினம் (4ம் தேதி) வரை நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 980 ரேஷன் கடைகளில் 600 ரேஷன் கடை பகுதிகளில் முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடந்தது.

இதனிடையே பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தபோதும் சிறப்பு முகாம் வழக்கம் போல் நடைபெறும் என கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று வழக்கம் போல் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் 380 ரேஷன் கடை பகுதிகளிலும் 2வது கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நேற்று துவங்கியது. இம்முகாம் வரும் 16ம்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Tutukudi ,Thuthukudi District ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…