×

₹2 கோடியில் அறிவுசார் மையம் அமைப்பு

நாமக்கல், ஆக.6: நாமக்கல் நகராட்சி பகுதியில், ₹2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சி பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. கொசவம்பட்டி ஏரி சீரமைப்பு, புதிய சந்தை வளாகம் கட்டுதல், பூங்காக்கள் அமைத்தல், அறிவுசார் நூலகம் அமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் முடிவடைந்த பணிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதனிடையே, நாமக்கல் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நாமக்கல் முல்லை நகரில் 4500 சதுர அடியில், ₹2 கோடியில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.

இதில், 2 மாடிகளுடன் நூலகம் புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்து, மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்து நாமக்கல் நகராட்சி அலுவலகம் பின்புறம், தினசரி சந்தை பகுதியில் அமைந்துள்ள நுண்ணுரம் தயாரிப்பு மையத்தை அவர் ஆய்வு செய்தார்.

அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நகரில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளை, மறுசுழற்சிக்கு எந்த வகையில் பயன்படுத்தலாம் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பின்னர், நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில், காலை உணவு தயார் செய்ய முதலைப்பட்டியில் நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தை கூடுதல் இயக்குநர் நேரில் பார்வையிட்டார். அப்போது, பொது நவீன சமையல் கூடத்தில் இருந்து தயாரிக்கப்படும் காலை உணவு, எத்தனை பள்ளிகளுக்கு செல்கிறது என்ற விபரத்தை கேட்டறிந்த அவர், சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், சேலம் மண்டல நகராட்சி நிர்வாக பொறியாளர் மகேந்திரன், நகராட்சி பொறியாளர் சண்முகம், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் கண்ணன், மேலாளர் கோபிநாத், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ₹2 கோடியில் அறிவுசார் மையம் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Institute of Knowledge Centre ,Namakkal ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...