×

வெஸ்ட் இண்டீசுடன் இன்று 2வது டி20: பதிலடி கொடுக்குமா இந்தியா?

கயானா: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, கயானாவில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. ஆக.3ம் தேதி நடந்த முதல் டி20ல் வெ.இண்டீஸ் 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 கயானாவில் இன்று நடக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பேட்ஸ்மேன்கள் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதே டிரினிடாட் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அறிமுக வீரர் திலக் வர்மா மட்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய இன்னிங்சில் அவர் எடுத்த 39 ரன் தான் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அதிகபட்சமாக அமைந்தது. இஷான், கில், சூரியகுமார், சாம்சன், ஹர்திக், அக்சர் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதே சமயம், ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெ.இண்டீஸ் அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து முன்னிலையை அதிகரிக்க வரிந்துகட்டுகிறது.

சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணி வீரர்களுக்கு சாதகமான அம்சம். மேலும், கரீபியன் பிரிமியர் லீக் தொடர் அனுபவமும் அவர்களுக்கு கை கொடுக்கும். பதிலடி கொடுக்க இந்தியாவும், முன்னிலையை அதிகரிக்க வெஸ்ட் இண்டீசும் உறுதியுடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

The post வெஸ்ட் இண்டீசுடன் இன்று 2வது டி20: பதிலடி கொடுக்குமா இந்தியா? appeared first on Dinakaran.

Tags : T20I ,West Indies ,India ,Guyana ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...