×

மயிலாடியில் தொடரும் அட்டூழியம்; அரசு கட்டிடங்களை திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றும் குடிமகன்கள்: நட்புகளுடன் மதுவிருந்து வைத்து கும்மாளம்

அஞ்சுகிராமம்: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வழுக்கம்பாறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரம் மயிலாடியாகும். மயிலாடி மிகப்பெரிய தொழில் நகரம். இங்கு ஏராளமான கல் சிற்பக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், வாரச் சந்தை மற்றும் உழவர் சந்தை என மயிலாடி எப்போது பரபரப்பாக காணப்படும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாடி பகுதியில் அரசு வங்கிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள் இரவு நேரத்தில் எதிர்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக அரசு வங்கிக்கு எதிர்ப்புறம் உள்ள குறு வட்ட அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருந்தகம் ஆகிய அலுவலகத்துக்குள் இரவில் அத்துமீறி நுழைந்துவிடுகின்றனர். அங்கு மது குடித்து கும்மாளம் போடுகின்றனர். அதேபோல் அங்கேயே சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது உள்ளிட்ட செயல்கள் நடைபெறுவதால் துர்நாற்றம் வீசி வருவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதை ஏறிய குடிமகன்கள் அந்த வழியாகச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான செயல்களையும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்தும் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான டாக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது:- பேரும் புகழும் பெற்ற இந்த மயிலாடியில் நாங்கள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாதி, மத, கட்சி பேதமின்றி பொதுமக்கள் நலனுக்காகவும், பயன்பாட்டிற்காகவும் அரசிடம் இருந்து தொடர் முயற்சிகள் மூலமாக போராடி ஏராளமான அரசு நலத்திட்டங்களை பெற்றுள்ளோம்.

அதில் எஸ்பிஐ வங்கிக்கு எதிர்ப்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான குறு வட்ட அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகமும், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருந்தகமும் ஆகும். ஆனால் இவை தற்போது குடிமகன்களின் திறந்த வெளி பாராக மாறி உள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எனவே அரசு உடனடியாக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் இங்கிருந்து டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மயிலாடியில் தொடரும் அட்டூழியம்; அரசு கட்டிடங்களை திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றும் குடிமகன்கள்: நட்புகளுடன் மதுவிருந்து வைத்து கும்மாளம் appeared first on Dinakaran.

Tags : Anjugram ,Mayiladi ,Anjugram Vallukkampara highway ,Kumari District ,Mailadi ,
× RELATED ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்