×

அரியானா வன்முறை விவகாரம்; புலம்பெயர்ந்தோரின் 150 குடிசைகள் தரைமட்டம்; 65 எப்ஐஆர் பதிவு: 141 பேர் கைது

நுஹ்: அரியானாவில் நடந்த வன்முறையில் தொடர்புடையவர்களாக கருதப்படும் புலம்பெயர்ந்தோரின் 150 குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், இதுவரை 65 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 141 பேர் கைது செய்யப்பட்டனர். அரியானா மாநிலம் நுஹில் கடந்த சில தினங்களுக்கு முன் இரு சமூகத்தினரிடையே வன்முறை சம்பவத்தில் இரு ஊர்காவல் படையினர் உட்பட 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வீடுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. தொடர் பதற்றத்தால் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை 65 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நுஹ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிரிஷன் குமார் கூறுகையில், ‘நுஹ் வன்முறை சம்பவம் தொடர்பாக 65 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவத்திற்காக மத வழிபாட்டு தலத்தை பயன்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள 14 குற்றவாளிகள் மீது ஐபிசி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. தற்போது இயல்புநிலை திரும்புவதால், இணைய சேவைகளை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வதந்திகளை பரப்புபவர்கள் மீதும், இரு சமூகத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று மாலை வரை) நுஹ் பகுதியின் டவுருவில் தங்கியிருக்கும் புலம்ெபயர்ந்தோரின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் 150 குடிசைகள், 5 வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. இவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று கூறினார்.

The post அரியானா வன்முறை விவகாரம்; புலம்பெயர்ந்தோரின் 150 குடிசைகள் தரைமட்டம்; 65 எப்ஐஆர் பதிவு: 141 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ariana Violence Affair ,Ariana ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்