×

படைக்கப்படும் சாதனைகள் உடைக்கப்படுவதற்காகத்தான்; சச்சின்-கோஹ்லி ஒப்பீடு தேவையில்லாதது: இலங்கை மாஜி வீரர் சமிந்தாவாஸ் சொல்கிறார்

கொழும்பு: கிரிக்கெட் உலகில் பெரிய வீரர் சச்சினா அல்லது விராட் கோஹ்லியா என்ற விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் சமிந்தா வாஸ் கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர்.

200 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான டெஸ்ட் ரன்கள், 100 சதங்கள் என்று சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் இமாலய இலக்காக அமைந்துள்ளது. இந்த சாதனைகள் அனைத்தையும் ஒரே வீரர் மீண்டும் படைப்பது நடக்காத காரியம். ஏனென்றால் சச்சினின் 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் படைக்கப்பட்ட சாதனையை இனி எந்த வீரராலும் எட்டமுடியுமா என்பது கேள்விக்குறிதான் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஆனால் இன்னொரு பக்கம் 100 சதங்கள் சாதனையை விராட் கோஹ்லியும், 200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை ஆண்டர்சனும், அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை ஜோ ரூட்டும் விரட்டி வருகின்றனர். இதனால் கிரிக்கெட் வரலாற்றில் யார் பெரிய வீரர்கள் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் கூறியதாவது:-

சாதனை படைக்கப்படுவதே உடைக்கப்படுவதற்காக தான். எந்த வீரராலும் எந்த சாதனையையும் மொத்தமாக வைத்துக் கொள்ள முடியாது. விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் ஒப்பீடு எழுந்துள்ளதற்கான காரணம், இருவரும் அதிக ரன்களை விளாசியுள்ளனர். அதேபோல் விராட் கோஹ்லி இன்றும் இளமையாக காணப்படுகிறார். 34 வயதை எட்டிய வீரர் போல் அல்லாமல், இளைஞர்களுக்கு இணையான வீரராக ஃபிட்னஸில் இருக்கிறார். அதனால் விராட் கோஹ்லியிடம் இன்னும் 4 முதல் 5 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை மீதமிருக்கிறது.

சுனில் கவாஸ்கர், சச்சின், விராட் கோஹ்லி என்று இந்திய கிரிக்கெட் தலைமுறைக்கான வீரர்களை உருவாக்கியுள்ளது. விராட் கோஹ்லி 2 போட்டிகளில் மோசமாக விளையாடினாலே, மக்களின் எதிர்வினை அதிகமாக உள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லியின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தது. முன்பு சச்சினுக்கு இந்த பிரச்னை இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரரால் சிறப்பாக செயல்பட முடியாது.

சச்சின் எப்படி இரண்டாம் பாதி கிரிக்கெட் வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்தித்தாரோ, அதேபோல் விராட் கோஹ்லியும் சந்தித்துள்ளார். ஆனால் மோசமான காலகட்டத்தில் கூட விராட் கோஹ்லி டெக்னிக்கலாக சிறந்த வீரராகவே இருந்தார். இருபெரும் வீரர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அதனால் ஒப்பீடுகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post படைக்கப்படும் சாதனைகள் உடைக்கப்படுவதற்காகத்தான்; சச்சின்-கோஹ்லி ஒப்பீடு தேவையில்லாதது: இலங்கை மாஜி வீரர் சமிந்தாவாஸ் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Sachin-Kohli ,Saminthawas Colombo ,Sachin ,Virat Kohlia ,Saminthawas ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...