×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகிப்பதை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அடவகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் தெரிவிக்கிறது.

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று வாதிட்டார். அதற்கு எம்.எல்.ரவி தரப்பு வழக்கறிஞர் சக்திவேல், அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளது. அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று வாதிட்டார்.

ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என்று முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது என வாதிட்டார். இதையடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகிப்பதை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sendil Balaji Ilaga ,Enforcement Department ,Sendil Balaji ,Court ,Dinkaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...