×

கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பால பணி தீவிரம்: இம்மாத இறுதியில் தொடங்குகிறது; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

* சிறப்பு செய்தி
கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பால கட்டுமான பணிகள் இம்மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும் கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் ‘மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகவும் கருதப்பட்டது. இதற்காக ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் தொடர்ந்து 15% பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில் 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அமைந்தது. மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூவம் ஆற்றின் வழியே அமைக்க திட்டமிட்டு தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனக் கூறி பறக்கும் சாலைத் திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த அனுமதியையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன்பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிகள் விரைவில் துவங்கும் என்றும் அறிவிக்கப்பப்பட்டது. 2022ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.5,855 கோடி செலவில், 20.56 கிலோமீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய மாநிலங்களில் முதல்முறையாக இரு அடுக்கு சாலையாக அமைய உள்ளது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் போல் இல்லாமல் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் அடுக்கில், பேருந்துகள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்லும்.

இது ஆறு வழி சாலையாக அமைய உள்ளது. 2 வது அடுக்கில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை கனரக சரக்கு வாகனங்கள் இயங்கும் வகையில் 4 வழி சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் சாலையில் மொத்தம் 604 தூண்கள் எழுப்பபட உள்ளது. கட்டுமான பணிகளை தொடங்க கடல் ஒழுங்குமுறை, சுற்றுச் சூழல் துறை மற்றும் ரயில்வே துறையின் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.

மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. இந்நிலையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமான பணிகளை எப்போது தொடங்கும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து இதன் கட்டுமான பணிகள் இம்மாதம் இறுதியில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில் : சென்னையின் மிக முக்கிய திட்டமாக மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் பார்க்கப்படுகிறது. இம்மாதம் 15ம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதி துறைமுக அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு வழங்க உள்ளது. அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் இம்மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. ஈரடுக்கு பறக்கும் சாலை மொத்தம் 604 தூண்களால் அமைக்கப்பட உள்ளது.

அதில், 375 தூண்கள் கூவம் நதிப் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளிலும் அமைய உள்ளது. ஆனால் பணிகளை தொடங்குவதற்கு முன்பு மேம்பாலம் அமைய உள்ள இடங்களில் கட்டுமானத்திற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்த வேண்டும். பொதுவாகவே மதுரவாயல் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் மட்டுமே கனரக வானங்கள் அனுமதிக்கப்படுகிறது. பின்னர் இந்த திட்டத்திற்கு தேவையான அடிப்படை பணிகளை தொடங்கப்படும். அதன்படி கட்டுமான பணிகளை இடையூறுயின்றி நடைபெறுவதற்கான கனரக வாகனங்கள் மதுரவாயலிலிருந்து துறைமுகம் நோக்கி செல்வதற்கான சாலைகள் மாற்றியடைக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகே கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கும். அதேபோல் முன்பு மதுரவாயல் பகுதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது துறைமுகம் பகுதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் 2024ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 2024ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
* கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் வரை இடையே உள்ள தூரத்தில் அமைக்கப்படும் ஈரடுக்கு பாலமானது 20.6 கிலோமீட்டர் தூரத்தில் 7 என்ட்ரிகள் வைக்கப்படும்.
* பிற சாலைகளில் இருந்து ஏழு இடங்கள் உள்ள வாயிலாக உள்ளே நுழைய முடியும். மேலும் பாலத்தில் இருந்து வாகனங்கள் வெளியேற 6 இடத்தில் எக்சிட் வைக்கப்படுகிறது.
* சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும், காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும்.
* மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஆதாரம், கட்டுமான தளவாட விபரங்கள், மனிதவளம் உள்ளிட்ட தொழில்நுட்ப தகுதிகள் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் உள்ளது.
* இதில் 9.7 கி.மீ. கட்டுமானத்திற்கான டெண்டரை ஜே குமார் இன்ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குறிப்பிட்ட கிலோ மீட்டரில் கட்டுமான பணிகளை 910 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
* மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் பகல் நேரங்களிலும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படும். இதனால் சென்னை துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும்.

The post கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பால பணி தீவிரம்: இம்மாத இறுதியில் தொடங்குகிறது; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurawayal-Port waft ,Highway Department ,Maduravayal ,Highway ,Dinakaran ,
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...