![]()
செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 கோடி நூதன மோசடி செய்து தலைமறைவானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுராந்தகம் பஜார் வீதியில் ஜனார்த்தனன் மற்றும் அவரது மனைவி சற்குணாம்மாள் மற்றும் இவர்களது மகன் யுகேந்தர் ஆகியோர் ஜேஎஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் தங்க நகை சேமிப்பு திட்டம், அமுத சுரபி சேமிப்பு திட்டம், கல்வி சேமிப்பு திட்டம் எனக்கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்தனர். இந்நிலையில், ஜனார்த்தனன் அவரது மகன் யுகேந்தர் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
சற்குணாம்மாள் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளதால் அவர் அதே வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் பணத்தை கொடுத்த பொதுமக்கள் கேட்டபோது எனக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி உள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். விசாரணை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை அழைத்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மதுராந்தகத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 கோடி நூதன மோசடி: எஸ்பியிடம் பொதுமக்கள் புகார்; 2 பேர் தலைமறைவு appeared first on Dinakaran.
