×

எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர்ராஜா: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டமா?

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று முன்னாள் எம்பி அன்வர்ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நேற்று காலையில் சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது மீண்டும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தார். பின்னர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முறைப்படி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அன்வர்ராஜா அதிமுகவில் இணைந்தார். அதிமுவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அன்வர்ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். அண்ணா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்த நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து பேசியதால், விளக்கமே கேட்கப்படாமல் கடந்த 2021ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்த அன்வர்ராஜா, பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அன்வர்ராஜா. இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்ததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் அன்வர்ராஜா. அப்போது மாநிலங்களவையிலும் அன்வர்ராஜா அதை எதிர்த்து பேசினார்.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அன்வர்ராஜா ஓரங்கட்டப்பட்டார். ராமநாதபுரம் தொகுதி பாஜவுக்கு வழங்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார். தொடர்ந்து, கூட்டணி கட்சியான பாஜவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார் அன்வர்ராஜா. சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் கூறி வந்தார். 2021ம் ஆண்டு நடந்த சட்டப்போரவை தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கவில்லை.

இதையடுத்து கட்சியில் அவரது பேச்சு எடுபடாத நிலையில், “தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சசிகலா வர வேண்டும்” என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது
கடந்த சில மாதங்களாக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த அன்வர்ராஜாவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, தங்கள் பக்கம் சேர்ப்பதற்காக அவரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் இணைந்து கொள்ளலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்றையதினம் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேரில் சந்தித்து அதிமுகவில் அன்வர்ராஜா இணைந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர்ராஜா என்பதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அன்வர்ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. காரணம், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று சிலர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அன்வர்ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

The post எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர்ராஜா: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டமா? appeared first on Dinakaran.

Tags : Anwar Raja ,AIADMK ,Edappadi ,Ramanathapuram ,Chennai ,Former ,General Secretary ,Edappadi Palaniswami ,ADMK ,Dinakaran ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...