×

முதியவர் வெளியே சென்றதை நோட்டமிட்டு பீரோ, கதவுகளை உடைத்த கொள்ளையன் பிடிபட்டான்: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: முதியவர் வெளியே சென்றதை நோட்டமிட்டு பீரோ மற்றும் கதவுகளை உடைத்த கொள்ளையடிக்க முயற்சி செய்தவன் பிடிபட்டான். திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள கனகவல்லிபுரம் தெருவில் 79 வயது முதியவரான கிருபானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் தாமோதரன். இளைய மகன் அனு ஆகியோர் மேல் தளங்களில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கீழ்தளத்தில் முதியவர் கிருபாகரன் தனியாக வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அருகே உள்ள கடைக்கு நேற்று பிற்பகல் முதியவர் சென்றுள்ளார். அப்போது, கீழ் தளத்தில் இருந்து ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது.

இதனால், மேல் தளத்தில் இருக்கும் பெண்கள் கீழே வந்து பார்த்தபோது வீட்டில் மர்ம நபர் யாரோ இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, பயந்து வெளியே ஓடி வந்தனர். பின்னர், அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கிருபாகரன் வீட்டில் இரு பக்கங்களிலும் பொதுமக்கள் சூழ்ந்து இரு கதவுகளையும் மூடி தாழிட்டுள்ளனர். இதனை அடுத்து, மூத்த மகன் தாமோதரன் மற்றும் இளைய மகன் அனு ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருவரும் வந்து பார்த்தபோது கொள்ளையன் ஒருவன் உள்ளே இருப்பது உறுதியானது. இதையடுத்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விரைந்து வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் வெளியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.

அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தபோது, அறையில் பதுங்கி இருந்த கொள்ளையனை பிடித்து துணியால் கைகளைக் கட்டி வெளியே இழுத்து வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து கொள்ளையனிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை கிண்டி ஆலாச்சி நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (எ) அரவிந்த் குமார் என்பதும் கொள்ளையன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினின் வெளி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் மேல் தளத்தில் ஆட்கள் இருக்கும்போதே கடப்பாரையுடன் வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முதியவர் வெளியே சென்றதை நோட்டமிட்டு பீரோ, கதவுகளை உடைத்த கொள்ளையன் பிடிபட்டான்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur Theradi… ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...