×

பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திக்கிறார்; ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தெப்பக்காடு வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஊட்டி: ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை இழந்த குட்டி யானைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கிய பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. இதன் மூலம் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம் புகழ் பெற்றது. மேலும், ரகு பொம்மி யானை குட்டிகள், பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளி ஆகியோர் உலக புகழ்பெற்று லைம்லைட்டில் இருந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெப்பகாடு முகாமிற்கு நேரடியாக வந்து பொம்மன், பெள்ளி தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை 5ம் தேதி தெப்பகாடு முகாமில் பாகன் தம்பதிகளை சந்திக்க உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூர் வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை சுமார் மாலை 3.30 மணியளவில் மசினகுடி அருகே சிங்காரா செல்லும் சாலையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க 3.45 மணியளவில் 12 கி.மீ., தொலைவில் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்கிறார். முகாமில் பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்து உரையாடி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்.

தொடர்ந்து முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு மற்றும் பழங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4.45 மணியளவில் தெப்பகாட்டில் இருந்து மீண்டும் மசினகுடி ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று அங்கிருந்து ெஹலிகாப்டர் மூலம் மைசூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி கடந்த 31ம் தேதியில் இருந்து 5ம் தேதி வரை 6 நாட்களுக்கு தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருவதை முன்னிட்டு 5 மாவட்ட எஸ்பி.,க்கள், 18 ஏடிஎஸ்பி.,க்கள், 36 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 924 போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால், 2 கி.மீ. சுற்றளவுக்கு நக்சல் தடுப்பு பிரிவினர், அதிரடிப்படை பிரிவினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளனர்.

இதுதவிர மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் ஆகிய இடங்களில் சாதாரண உடையில் உளவுத்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நேற்று முதல் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனிடையே நேற்று முதுமலை தெப்பகாடு யானைகள் முகாம் கூட்டரங்கில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமையில், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட எஸ்பி., பிரபாகர், புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், துணை இயக்குநர்கள் வித்யா, அருண் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெப்பக்காடு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் மசினகுடி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்று விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை காலநிலை மாற்றத்தால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால் அவர் மசினகுடியில் இருந்து காரில் கோவை வந்து பின்னர் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் நிலை ஏற்படலாம். எனவே அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையிலும் போலீசார் பாதுகாப்பு பணியை முடுக்கிவிட்டு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ஒத்திகை
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூர் – மசினகுடி இடையே ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமினை சுற்றி மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக முதுமலை புலிகள் காப்பகம் ஐந்து அடுக்கு உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திக்கிறார்; ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தெப்பக்காடு வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bahan ,Pomman ,President Troubati Murmu ,Deepakadam ,Deepakadam Elephants Camp ,Mudumalai ,Depakkadam ,
× RELATED சில்லி பாயின்ட்…