×

பெரியகுளம் அருகே பரபரப்பு; மாஸ்க் தொழிற்சாலையில் தீ: ரூ.3 கோடி பொருட்கள் சேதம்; 8 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

 

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மாஸ்க் மற்றும் நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 8 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் நாப்கின் மற்றும் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீரென தீ பிடித்து தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் பணியாளர்கள், தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றும் தீ மளமளவென பரவியது. இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் தேனி மற்றும் பெரியகுளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் போடியில் இருந்தும் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தனியார் டேங்கர் லாரிகளில் நீர் வரவழைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ தொழிற்சாலை முழுவதும் பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கன பஞ்சு மற்றும் தயார் செய்து வைக்கப்பட்ட நாப்கின், முகக்கவசங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் எரிந்து நாசமாகின. இவைகளின் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது.

தீப்பற்றியவுடன் பெண் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரியகுளம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னை நார் மில்லில் பயங்கர தீ
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி நல்லகண்டத்தில் தென்னை நார் மில் உள்ளது. இந்த மில்லில் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்த பின் தொழிலாளர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் இரவு 8 மணியளவில் தென்னை நார் வைக்கப்பட்டுள்ள பகுதியில் திடீரென கரும்புகை எழுந்தது. காற்றின் வேகத்தில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) அம்சராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மில்லில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.பல லட்சம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த நத்தம் போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post பெரியகுளம் அருகே பரபரப்பு; மாஸ்க் தொழிற்சாலையில் தீ: ரூ.3 கோடி பொருட்கள் சேதம்; 8 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Periyakulam ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும்...