×

சிவகாசி மாநகரில் 10 இடங்களில் கழிவறை: சுகாதார சீர்கேட்டை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

சிவகாசி: சிவகாசி மாநகரில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் 10 இடங்களில் சிறுநீர் கழிக்கும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டாசு நகரான சிவகாசிக்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு மாநகருக்கு வரும் லட்சக்கணக்கானோருக்கு சிறுநீர் கழிக்க போதிய வசதி இல்லை என்பதால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலும், பொதுஇடங்களில் சிறுநீர் கழித்தனர். இதனால் மாநகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதை தடுக்க, சிவகாசி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடம், நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகியவற்றில் நவீன சிறுநீர் கழிப்பிடம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிவகாசி மாநகராட்சியில் முக்கிய பகுதிகளான திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகில், செங்குளம் கண்மாய் அருகில், திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில், சிவகாசி காமராஜர் ரோடு பிஎஸ்என்எல் அருகில் உட்பட 10 இடங்களில் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுநீர் கழிப்பிடமும் தலா ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்தவுடன் அனைத்து சிறுநீர் கழிப்பிடங்களும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன.

The post சிவகாசி மாநகரில் 10 இடங்களில் கழிவறை: சுகாதார சீர்கேட்டை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi Nagar ,Sivakasi ,Sivagasi City ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!