×

ராகுலின் எம்.பி. பதவி தப்பியது!: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி..!!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அவதூறுவழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் நீதிமன்றம் விதித்திருந்தது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் எம்.பி. என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் ஐகோர்ட்டில் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தான் குற்றம் இழைக்காததால் மன்னிப்புகேட்க முடியாது என ராகுல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் கவாய், நரசிம்மா, சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ராகுல் வழக்கை விசாரிக்கிறது. ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதம் செய்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

ராகுல் மீது வழக்கு தொடர்ந்தவர் குடும்ப பெயர் modh:

அவதூறு வழக்குகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை சிங்வி வாசித்து வருகிறார். ராகுல் மீது வழக்கு தொடர்ந்த புர்நேஷ் மோடியின் உண்மையான குடும்பப் பெயர் மோடி அல்ல modh என்று ராகுல் தரப்பு தெரிவித்தது. modh என ஆவணங்களில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் செய்தார். ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் ஒரு வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடுத்தவர்கள் அனைவருமே பாஜக நிர்வாகிகள் என்பது மிகவும் விசித்திரமான உண்மை என்று அபிஷேக் தெரிவித்தார்.

ராகுல் வழக்கு எவ்வாறு ஒழுக்க சீர்கேடு வழக்காகும்?:

ராகுல் காந்தி விவகாரம் எவ்வாறு ஒழுக்க சீர்கேடு சம்பந்தப்பட்ட வழக்காக மாறும்? என்று ராகுல் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி கிரிமினல் அல்ல; இந்த உத்தரவால் 8 ஆண்டுகள் மவுனமாக்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தில் அனைவருக்குமே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டார்.

பேச்சுகளில் கவனம் தேவை: ராகுலுக்கு கோர்ட் அட்வைஸ்

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை ஏன்? – நீதிபதி

ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை விதித்தது ஏன் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனிநபருக்கான தண்டனை என்பதாக மட்டும் அல்லாமல் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. அதிகபட்ச தண்டனை தந்தது ஏன் என்பது பற்றி தீர்ப்பளித்த நீதிபதி எந்த காரணத்தையும் கூறவில்லை. 2 ஆண்டு என்பதற்கு பதில் 1 ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் பதவி இழந்திருக்க மாட்டார் என நீதிபதி கவாய் தெரிவித்தார்.

விசாரணை நிறைவு:

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை கோரிய வழக்கில் விசாரணை நிறைவு பெற்றது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வில் விசாரணை நிறைவடைந்தது.

ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை. ராகுல் மீதான தண்டனை தீர்ப்பு என குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது.

ராகுல் வழக்கில் குஜராத் நீதிமன்ற தீர்ப்பு வயநாடு தொகுதி மக்களின் உரிமையை பாதிக்கக்கூடியதாகும். ஒரு நாள் சிறை தண்டனை குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் ராகுலின் எம்.பி. பதவி பறிபோய் இருக்காது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை ஏற்கனவே குஜராத் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தண்டனையால் தொகுதி மக்களின் உரிமை பாதிப்பு:

தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி மனுதாரர்கள் விளக்கம் தர வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

ராகுலின் எம்.பி. பதவி தப்பியது:

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்பியது. கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி எம்.பி. பதவி: அடுத்தது என்ன?

ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கியதாக மக்களவை செயலகம் அறிவித்திருந்தது. தகுதி நீக்கம் செய்ததை மக்களவை செயலகம் திரும்பப்பெற்றால் ராகுல்காந்தி எம்.பி.யாக தொடர்வார். 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த மறுநாளே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவையும் ராகுல் காந்தி காலி செய்தார். உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து தகுதிநீக்கத்தை உடனடியாக திரும்பப்பெற்றால் நடப்பு கூட்டத்தொடரிலேயே ராகுல் பங்கேற்பார். ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திலும் ராகுல் பங்கேற்க வாய்ப்புள்ளது.

 

The post ராகுலின் எம்.பி. பதவி தப்பியது!: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : Rakulin M. ,Supreme Court ,Raqul Gandhi ,Delhi ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு