×

திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயிலில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ளது முத்தழகுபட்டி கிராமம். இங்கு 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மூன்றாம் நாளில் முக்கிய நிகழ்வாக அன்னதான நிகழ்ச்சி மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை நடைபெறும்.

முன்னதாக செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிறைவேற்றி தந்ததை அடுத்து அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களால் முடிந்த காணிக்கையாக அரிசி, பருப்பு, ஆடு, கோழி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், போன்ற காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவற்றை செலுத்துவர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் திருவிழாவின் போது அந்தக் குழந்தையை கோயிலில் ஒப்படைத்து விடுவார்கள். பின்னர் அந்த குழந்தையை கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவார்கள்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குழந்தைகளை ஏலம் எடுத்து அதற்கான தொகையை கோயிலில் செலுத்துவார்கள். பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையின் தாய், தந்தையர் ஏலத் தொகையை கொடுத்து தங்கள் குழந்தையை வாங்கி கொள்வார்கள்.அதன்படி முத்தழகுபட்டி ரோகிணி ஆரோகியம் என்பவர் குழந்தை வரம் கேட்டு கடந்தாண்டு திருவிழாவில் வேண்டி செபஸ்தியாருக்கு வேண்டுதல் வைத்திருந்தார். இந்தாண்டு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை திருவிழாவின் மூன்றாம் நாளில் ரூ.600க்கு ஏலத்தில் விட்டார். பின்னர் கோயில் நிர்வாகத்தினரிடம் ஏலத் தொகையினை செலுத்தி குழந்தையை பெற்றுக் கொண்டார்.

செபஸ்தியாருக்கு பொதுமக்கள் காணிக்கையாக வழங்கக்கூடிய ஆடு, கோழி, காய்கறிகள் பலசரக்கு சாமான்கள் ஆகியவற்றை கொண்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு அசைவ உணவு அன்னதானம் மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது.

The post திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயிலில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத விழா appeared first on Dinakaran.

Tags : Dindigul St. Sebastian's Temple Bizarre Festival of Baby Auction ,Dindigul ,Mutzhagupatti ,St. ,Sebastian ,Dindigul St. Sebastian temple ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...