×

போக்குவரத்து கண்காணிப்பாளருக்கு அரசு துறையை போல ஊதிய நிர்ணயம் ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை, ஆக. 4: மதுரையை சேர்ந்த சம்பத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு போக்குவரத்து கழகத்தில் 1980ல் எழுத்தராக சேர்ந்தேன். 2017ல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றேன். கண்காணிப்பாளர், பொறியாளர்கள், மேலாண் இயக்குனர்கள் வரை அரசு ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலும் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் தொழில் தாவா சட்டப்படி அவ்வப்போது ஏற்படும் ஊதிய ஒப்பந்தம் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படும். பணிப்பிரிவிலிருந்து கண்காணிப்பாளர்கள், பொறியாளர்களாக பதவி உயர்வு பெறுவோருக்கான ஊதியம் குறித்து கடந்த 2018ல் அரசாணை வெளியிடப்பட்டது.

அதில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றோருக்கு அரசு துறையை போல 2.57 என்ற அளவில் (காரணி) ஊதிய உயர்வு இல்லாமல், மற்ற போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்குவதை போல 2.44 என்ற அளவில் ஊதிய உயர்வு அளிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இதை ரத்து செய்து அரசு துறைகளில் வழங்குவது போல் 2.57 என்ற அளவில் ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு ஊதிய ஒப்பந்தம் அடிப்படையில் பணப்பலன்கள் வழங்கியது தவறு. மனுதாரரை போன்ற சிலருக்கு 2.57 என்ற அளவில் ஊதிய உயர்வு வழங்கிவிட்டு மனுதாரருக்கு மறுக்கப்பட்டது சட்டவிரோதம். இதனால் மனுதாரருக்கு 3 வாரத்தில் அரசு துறைகளில் வழங்குவது போல் 2.57 என்ற அளவில் ஊதிய உயர்வை முடிவு செய்து, 6 வாரத்தில் அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டும். தவறினால் 6 சதவீத வட்டி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post போக்குவரத்து கண்காணிப்பாளருக்கு அரசு துறையை போல ஊதிய நிர்ணயம் ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICORT branch ,Government Department ,Madurai, Ga. 4 ,Sambat ,Madurai ,Igort Madurai Branch ,Government Department of Wage ,iCourt ,Dinakaran ,
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்