- Bhadrakaliyamman
- கோவில்
- கும்மிடிப்பூண்டி தீ மிதிபூண்டி திருவிழா
- Kummidipoondi
- மேட்டுப்பாளையம்
- செல்லியம்பேடு ஊராட்சி
- Bhadrakaliamman
- பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சேலியம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் சுமார் 53 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் சிலையுடன் மங்காவரத்தான் சமேத பத்ரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீ மிதி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இக்கோயிலில் நேற்றுமுன்தினம் 10ம் ஆண்டு தீ மிதி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக, கடந்த வெள்ளியன்று தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தல், அம்மன் கரகம் ஊர்வலம் வருதல் உள்பட பல்வேற சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன.
இந்நிலையில், பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 10ம் ஆண்டு தீ மிதி திருவிழாவை முன்னிட்டு அன்று மதியம் கூழ்வார்த்தல், அம்மன் சன்னதியில் வாடை பொங்கல் வைத்தல், வேப்பிலை ஆடை அணிந்து, காப்பு கட்டிய சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நாவில் வேல் தரித்து, பக்தி பரவசத்துடன் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். பின்னர், அன்றிரவு வாணவேடிக்கையுடன் மங்காவரத்தான் சமேத பத்ரகாளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.
The post கும்மிடிப்பூண்டி அருகே பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.