×

திருமணத்தை மீறிய பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் கடலோர காவல்படை ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: டிஜிபி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருமணத்தை மீறிய பந்தத்தில் ஈடுபட்டுள்ள கடலோர காவல் படை கூடுதல் எஸ்.பி. சங்கருக்கு எதிரான புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் டி.ஜி.பி.யுமான திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எனது மனைவியுடன் நாகப்பட்டினத்தில் கடலோர காவல் படை கூடுதல் எஸ்.பி.யாக உள்ள சங்கர் திருமண பந்தத்தை மீறிய தொடர்பை வைத்துள்ளதால் அவர் மீது தமிழ்நாடு காவல் பணி நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி.க்கு கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தேன்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டாக்டர் பிரபு திலக் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், கூடுதல் எஸ்.பி.க்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, கூடுதல் எஸ்.பி.க்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு, இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post திருமணத்தை மீறிய பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் கடலோர காவல்படை ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: டிஜிபி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coast Guard ASP ,DGP ,CHENNAI ,Coast Guard Additional S.P. ,Shankar ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம்...