×

தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை வாக்கு சேகரிப்பதை தடுப்பது சட்டப்படி குற்றம்: ‘மாமன்னன்’ படத்தை சுட்டிக்காட்டி நீதிபதி கருத்து

மதுரை: தேர்தலில் போட்டியிடுவோர் வாக்கு சேகரிப்பதை தடுப்பது சட்டப்படி குற்றம் என்றும், தடுக்க யாருக்கும் உரிமை இல்லையென்றும் மாமன்னன் படத்தை சுட்டிக்காட்டி ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த ஹபீப் முகம்மது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2014ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜ சார்பில் தஞ்சை தொகுதியில் கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மல்லிப்பட்டினம் பகுதிக்கு சென்றபோது வன்முறை ஏற்பட்டது. இதில் ஏராளமான சொத்துகள், இயந்திர படகுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்கவும், இழப்பீட்டுக்குரிய பணத்தை கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரிடம் இருந்து வசூலிக்கவும், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு எம்எல்ஏவாக வருவார். இடைத்தேர்தலில் போட்டியிடும் அவரை வீழ்த்த எதிர்தரப்பினர் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துவர். இதனால், வாக்கு கேட்டு வடிவேலுவால் குறிப்பிட்ட பகுதிக்குள் பிரசாரத்துக்கு செல்ல முடியாது. ஆனால், எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பம் அவருக்கு கைகொடுக்கும். சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர் வாக்காளர்களை சென்றடைவார். இதைப் போன்றதொரு சூழ்நிலையைத் தான் அந்த தேர்தலில் கருப்பு முருகானந்தம் சந்தித்துள்ளார்.

கடந்த 14.4.2014ல் மல்லிப்பட்டினம் கிராமத்துக்கு பிரசாரத்துக்கு சென்றபோது கிராமத்துக்கு வெளியே கூடியவர்கள், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கருப்பு முருகானந்தம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அவருடன் வந்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷமிட்டு, வன்முறையில் ஈடுபட்டதாகவும் மனுதாரர் தரப்பு கூறுகிறது. தேர்தலில் வாக்கு கேட்பது அடிப்படை உரிமை. நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் ஜனநாயகம் தான். இவற்றை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம்.

சுதந்திரமான, வலுவான பிரசாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலி கூத்தாகிவிடும். வேட்பாளர்கள், கட்சிகளை பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த வழக்கில் சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும். அதற்கு முன்னதாக உண்மையை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். எனவே மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை வாக்கு சேகரிப்பதை தடுப்பது சட்டப்படி குற்றம்: ‘மாமன்னன்’ படத்தை சுட்டிக்காட்டி நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...