×

டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் அமித்ஷாவுடன் ‘இந்தியா’ எம்பிக்கள் கடும் மோதல்: 4 மணி நேரம் காரசார விவாதம்

புதுடெல்லி: இந்தியா கூட்டணி எம்பிக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தின் மீது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், இந்தியா கூட்டணி எம்பிக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. நேற்றும் அவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பிற்பகலில் அவை மீண்டும் கூடிய போது, டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கும் சேவைகள் மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: டெல்லி சேவைகள் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, இது சட்டத்திற்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு இந்த சபைக்கு இருக்கும் தகுதி குறித்து விரிவான அறிக்கை தருகிறேன். டெல்லி தொடர்பான எந்தவொரு பிரச்னையிலும் சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது அரசியலமைப்பில் டெல்லிக்கான சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு அனுமதி அளிக்கும் விதிகள் உள்ளன. 239ஏஏ பிரிவின் கீழ் அரசியலமைப்பு அத்தகைய அதிகாரங்களை வழங்கியுள்ளது ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் ஆகியோர் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கும் யோசனைக்கு எதிராக இருந்தனர். எதிர்கட்சியினர் டெல்லியைப் பற்றி சிந்திக்க வேண்டும், உங்கள் கூட்டணி பற்றி அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ, சில கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கோ, சட்டத்தை ஆதரித்தும், எதிர்க்கும் அரசியலிலும் ஈடுபட வேண்டாம் என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் எனது வேண்டுகோள்.

புதிய கூட்டணிகளை உருவாக்க பல வழிகள் உள்ளன. மசோதாக்கள் மற்றும் சட்டங்கள் மக்கள் நலனுக்காகவே உள்ளன. டெல்லி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவை ஆதரிக்கப்பட வேண்டும் அல்லது எதிர்க்கப்பட வேண்டும். உங்கள் கூட்டணிக்காக மக்கள் நலனைப் பலி கொடுக்காதீர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், கூட்டணி வைப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கும் மக்கள் ஆணை கிடைத்தது. ஆனால் இப்போது நீங்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் 2014ம் ஆண்டுவரை 10 ஆண்டுகளாக அரசை நடத்தியபோது ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழலில் ஈடுபட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆம்ஆத்மி கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என்று காங்கிரசிடம் நான் கூற விரும்புகிறேன். இவ்வாறு பேசினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘டெல்லியில் சேவைகள் தொடர்பாக முடிவெடுக்க டெல்லி சட்டசபைக்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளித்து உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதித்தால், பிற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகளை ஒன்றிய அரசு ரத்து செய்து, அவற்றுக்கான முடிவுகளை எடுக்கும். மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆட்சியை நடத்த முடியாவிட்டால் என்ன பயன்?.தயவுசெய்து இதுபோன்ற மசோதாவைக் கொண்டு நடைமுறையை உடைக்க வேண்டாம்’ என்று கூறினார்.

அப்போது குறிக்கிட்ட ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்,’ காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆம்ஆத்மிக்கு ஆதரவாக இந்த மசோதாவை கட்சி எதிர்க்கிறது’ என்றார். அதற்கு அதிர்ரஞ்சன் சவுத்திரி,’ இந்தியாவுக்குள் பிளவுகளை உருவாக்க முயற்சிக்காதீர்கள்’ என்று பதிலடி கொடுத்தார். மக்களவையில் உள்ள ஒரே ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் சிங் ரிங்கு பேசுகையில், ‘ ஆம்ஆத்மியின் நோக்கம் ஒன்றிய அரசுடன் சண்டையிடுவது அல்ல, மாறாக அரசியலமைப்பு சட்டத்தை தலைகீழாக மாற்றுவதை காப்பாற்றுவதுதான் நோக்கம்’ என்றார்.

பா.ஜ எம்பி ரமேஷ் பிதூரி,’டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஊழலுக்கு எதிராக அனைத்து இடங்களிலிருந்தும் மக்களை திரட்டிய முதல்வர் அவர். ஆனால் கடைசியில் அவருக்கு ஆதரவானவர்களையும் அவர் ஏமாற்றிவிட்டார்’ என்றார். டெல்லி சேவைகள் மசோதாவிற்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் பினாகி மிஸ்ரா பேசும் போது, ‘சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அது நல்ல சட்டமா, கெட்ட சட்டமா என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் போன்ற முழுமையான மாநிலங்களுக்கு இந்த சட்டத்தை கொண்டு வர முடியாது. தனித்துவமான மற்றும் சிறப்பு அந்தஸ்து கொண்ட தேசிய தலைநகர் டெல்லியின் விஷயத்தில் மட்டுமே இதைச் செய்ய முடியும்’என்று பேசினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி பி.வி மிதுன் ரெட்டியும் இந்த மசோதாவை ஆதரித்தார். அவர் பேசுகையில்,’ இது ஒரு தனித்துவமான மசோதா. இது மற்ற மாநிலங்களுக்குப் பின்பற்றப்படாது’ என்று நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி சேவைகள் மசோதா மீது கிட்டத்தட்ட 4 மணி நேரம் விவாதம் நடந்தது. இறுதியாக அனைத்து விவாதங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.

அவர் கூறுகையில்,’ யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லியில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளது. டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பதால், விதிகளை உருவாக்கவும் ஒன்றிய அரசுக்கு முழு உரிமை உண்டு. மசோதாவைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கைகோர்த்து உள்ளன. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிரிந்துவிடும். டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. சட்டசபை கூட்டத்தொடரை முறையாக கூட்டவில்லை. டெல்லி அரசின் அமைச்சரவைக் கூட்டம் கூட முறையாகக் கூட்டப்படுவதில்லை.

எனவே இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும். இது டெல்லி மக்களின் நலனுக்கானது. இதை எதிர்க்கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் விரும்பினால் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அந்த விவாதத்திற்கும் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். அதை தொடர்ந்து டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டதால் இனிமேல் மாநிலங்களவையில் நிறைவேற்ற வேண்டும். அதன்பின் இந்த மசோதா சட்டமாக்கப்படும்.

* எதிர்க்கட்சிகள் அழைப்பை ஏற்ற சபாநாயகர்
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2ம் நாளாக நேற்று காலையும் அவைக்கு வரவில்லை. அவர் அவைக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுகோள் விடுத்தார். நேற்று மக்களவை கூடியதும், ‘முழு சபையும் சபாநாயகரை விரும்புகிறது. தயவு செய்து சபாநாயகரை அவைக்கு வர வற்புறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் சரி, அவற்றை தீர்த்து வைப்போம். சபாநாயகர் தான் எங்கள் பாதுகாவலர், அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்கள் கருத்துக்களை அவர் முன் தெரிவிப்போம்’ என்று கூறினார்.

அதன்பின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சபாநாயகரை சந்தித்து, மக்களவையின் அலுவல்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தார். ஆதிர் ரஞ்சன் சவுத்திரியுடன் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், திமுக எம்பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சவுகதா ரே, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, ஆர்எஸ்பி உறுப்பினர் என் கே பிரேமச்சந்திரன் ஆகியோரும் சபாநாயகரை அவரது அறையில் சந்தித்து அவைக்கு திரும்ப வரும்படி அழைத்தனர். இதை ஏற்று நேற்று மதியம் சபாநாயகர் ஓம்பிர்லா அவைக்கு வந்தார்.

* ஆம்ஆத்மி எம்பி சஸ்பெண்ட்
டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அதன் நகலை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி மக்களவையில் ஒரே ஒரு ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரிங்கு வீசினார். அப்போது அவையை சபாநாயகர் ஓம்பிர்லா நடத்திக்கொண்டு இருந்தார். ரிங்கு மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியாதபடி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

* நேருவை புகழ்ந்த அமித்ஷா: இது பகலா அல்லது இரவா என்று கேட்ட ஆதிர்ரஞ்சன்
காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பேசியதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திரும்பத் திரும்ப நேருவை புகழ்ந்து பேசுகிறார். இதை கேட்டபோது இது பகலா அல்லது இரவா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் கேட்பது உண்மையா என்று எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன். நேராக அமித்ஷாவிடம் சென்று அவரது வாய்க்கு இனிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உடனே அமித்ஷா எழுந்து குறுக்கிட்டு,’ நான் பண்டித நேருவைப் பாராட்டவில்லை. அவர் கூறியதை வெறுமனே மேற்கோள் தான் காட்டினேன். இதை புகழ்ச்சிப்பேச்சாக பரிசீலிக்க அவர்கள் விரும்பினால், அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ என்றார்.
அதற்கு அதிர்ரஞ்சன் சவுத்திரி,’ உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நேருவின் ஆதரவைப் பெறுங்கள். நீங்கள் இதை முழுவதுமாகச் செய்திருந்தால், மணிப்பூர் மற்றும் அரியானாவில் நடந்த நிகழ்வுகளை நாங்கள் பார்க்க வேண்டியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாவை டெல்லிக்கு கொண்டு வர முடியுமானால், மற்ற மாநிலங்களையும் ஒன்றிய அரசு இதே போல் கட்டுக்குள் கொண்டு வர முடியும். டெல்லியில் மோசடிகள் நடக்கின்றன என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற பல விசாரணை அமைப்புகள் உள்ளன. அதை வைத்து விசாரிக்க வேண்டியதுதானே இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.

* கூட்டணிக்காக டெல்லியில் நடக்கும் ஊழலை ஆதரிக்க வேண்டாம்
அமித்ஷா பேசும் போது,’கூட்டணியில் இருப்பதால் டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலையும் ஆதரிக்க வேண்டாம் என்று கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் கூட்டணியில் இருந்தாலும் அடுத்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். 2015ம் ஆண்டு டெல்லியில் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் ஒரே நோக்கம் போராடுவதையே தவிர, சேவை செய்வதை அல்ல. அவர்கள் அதிகாரிகள் இடமாற்றத்திற்காக போராடவில்லை. பங்களாக்கள் கட்டுவது போன்ற ஊழலை மறைக்க விஜிலென்ஸ் துறையின் கட்டுப்பாட்டைப் பெறுவதுதான் அவர்களின் பிரச்சனை’ என்று பேசினார்.

* ரூ.2600 கோடியில்
துருவ ஆராய்ச்சி கப்பல்
மாநிலங்களைவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய புவி அறிவியல்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில்: துருவ ஆராய்ச்சி கப்பலை வாங்குவதற்கான முயற்சி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இப்போது இந்த கப்பலின் விலை ரூ.2,600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இதற்கான முன்மொழிவை அமைச்சரவையில் எடுத்த செல்ல அரசு தயாராக உள்ளது. துருவ ஆராய்ச்சி கப்பல்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நாடுகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் துருவ ஆராய்ச்சி கப்பலை இந்தியா பெற்றிருக்கும். ஆனால் இந்த கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கவே அரசு விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

* உயர்நீதிமன்றங்கள் பெயர் மாற்றம் இல்லை
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்து மூலமாக அளித்த பதிலில், “2016ம் ஆண்டு ஜூலையில் உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவதற்கு உயர்நீதிமன்றங்கள் (பெயர் மாற்றுதல்) மசோதாவை அரசு கொண்டு வந்தது. பின்னர் சில புதிய பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை மேலும் எடுத்து சென்று செயல்படுத்த முடியவில்லை. 16வது மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது. பல்வேறு உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றும் திட்டம் தற்போது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் அமித்ஷாவுடன் ‘இந்தியா’ எம்பிக்கள் கடும் மோதல்: 4 மணி நேரம் காரசார விவாதம் appeared first on Dinakaran.

Tags : Amitsha ,New Delhi ,India Alliance ,India ,Dinakaran ,
× RELATED கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்...