×

மாநாட்டுக்காக கரன்சிகளை இறைக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘மாநாட்டுக்காக கரன்சிகளை வாரியிறைக்கும் சேலம்காரர் பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியின் ஒற்றை தலைமைக்கு எதிரா தேனிக்காரர் முட்டுக்கட்டை போட்டுக்கிட்டே இருக்கார். ஆனால் அதையெல்லாம் சேலம்காரர் கண்டுகொள்ளவே இல்லையாம். இதற்காக கரன்சியை தண்ணீராக செலவிடவும் ஆட்களை தயார் செய்து வைத்துள்ளாராம். இதற்காக அவர் எடுத்துள்ள ஆயுதம்தான் தூங்கா நகரத்து மாநாடாம். தேனிக்காரரின் கோட்டையிலேயே மாநாடு நடத்தி அவருக்கு டென்ஷன் அளிக்கவே இந்த ஏற்பாடாம். இனி, தென்மாவட்டம் என்னோடதுன்னு தேனிக்காரர் கனவில்கூட சொல்லவே கூடாதுங்கிறதுதான் சேலத்துக்காரரோட முழுதிட்டமாம். ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்தும் குறைந்தது பத்தாயிரம் பேரை கொண்டுவந்து குவிக்க உத்தரவிட்டுள்ளாராம். இதற்காக ஒரு பஞ்சாயத்துக்கு ரெண்டு வேனும், தலைக்கு ரூ.250ம் கையில கொடுக்கணுமுன்னு சேலம்காரர் உத்தரவு போட்டிருக்காராம். இதற்காக எத்தனை கோடிகள் செலவழிஞ்சாலும் பரவாயில்லை எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்.. எந்த கவலையும் வேண்டாம் என்று நம்பிக்கையை அளித்துள்ளாராம். அதுவும் தேனிக்காரர் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை அரஸ்ட் செய்யணுமுன்னு சொல்லக் கூடிய கூட்டம் சேலத்துக்காரருக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தியிருக்காம். கரன்சியை பற்றி கவலைப்பட வேண்டாமுன்னு சொல்லிட்டதால கட்சிக்காரர்கள் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்களாம். கடந்த நாலு ஆண்டு ஆட்சியில குவித்த கரன்சியை வச்சி இன்னும் நாற்பது மாநாடு கூட நடத்துவாரு எங்கள் தலைவருன்னு சேலத்துக்காரரின் அடிபொடிகள் இப்போ அடிச்சி சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மவுண்டன் யாத்திரையில் வடமாநில நதியின் பெயர் கொண்ட மாவட்டத்தில் என்ன பிரச்னையாம்…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.

‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் மவுண்டன் யாத்திரையில் ஒரே ரகளையாம். இங்கு மாவட்ட தலைவர் தலைமையில், முன்னாள் தேசிய செயலாளரும் சர்ச்சை பேச்சாளர் என்று பெயர் பெற்றவர் தலைமையில் ஒரு கோஷ்டி, தஞ்சை மன்னர்கள் பெயர் கொண்ட முன்னாள் எம்எல்ஏ தலைமையில் ஒரு கோஷ்டி என மாவட்டம் முழுவதும் ஏகப்பட்ட கோஷ்டிகளாம். பாத யாத்திரை வந்த மவுண்டன், வடமாநில நதி பெயரில் முடியும் பெயருக்குரிய நகருக்குள் பேசும்போது, அந்த வாகனத்தில் முன் பகுதியில் முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும் மட்டும் மவுண்டனின் இருபுறமும் நின்று கொண்டார்களாம். மாவட்ட தலைவரை பின்னால் நிக்க வைச்சுட்டாங்களாம். இதனால் ஏக கடுப்பில் இருந்த மாவட்டத் தலைவரின் அடிபொடிகள், அந்த கோபத்தை மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் நடந்த மவுண்டன் வரவேற்பில் இரண்டு பேருக்கும் காட்டிட்டாங்க. அங்கு மவுண்டனை வரவேற்பதில் முன்னாள் எம்எல்ஏ முந்திக் கொள்ள, அதெப்படி மாவட்ட தலைவர் நான் வரவேற்காமல், நீங்கள் வரவேற்கலாம் என சண்டை போட்டுக் கொண்டார்களாம். அதைத்தொடர்ந்து லேசான கைகலப்பும் நடந்து ரகளையானதாம்… இதனால மவுண்டன் தலைசுற்றல் நள்ளிரவு வரை நிற்கவே இல்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனியைவிட குக்கருக்காக அதிகமாக கூடிய கூட்டத்தை பார்த்து யாருக்கு அதிர்ச்சியாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி ஆட்சியில் தேனிக்காரர் தான் துணை முதல்வரா இருந்தார். அப்போதெல்லாம் கொடநாடு கொலை குற்றவாளிகளை பிடிக்க சொல்லி வற்புறுத்தாதவர், திடீரென குக்கர்காரரோடு சேர்ந்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். ஹனீபீ நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இருவரும் சேர்ந்து கோஷம் எழுப்பினாங்க. ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக, குக்கர்காரர் தன்னை தீவிரமா ஆதரிக்கக் கூடிய ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவங்களை சாவடி வாரியாக போய் பார்த்து வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் தேனீக்காரருக்கு கூடுன கூட்டத்தை காட்டிலும், குக்கருக்கு ஆதரவாகவே விசில் சத்தம் அதிகமாகவே இருந்ததாம்… மேலும், தேனீக்காரர் பேச்சை கேட்க விடாமல் விசில் அடிச்சபடியே இருந்தாங்களாம். ஒரு கட்டத்துல கடுப்பான தேனிக்காரர், ‘அட, சும்மா இருங்கப்பா…’ என்று கதற வேண்டியதாகப் போச்சு. இதனால நீண்ட நேரம் பேச வந்தவர் சுருக்கமாக பேசிட்டு போயிட்டாராம். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், தேனிக்காரரிடம் அவரது ஆதரவாளர்கள் சிலர், ‘பேசாம நாமளே தனியா ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம். குக்கர்காரரால தான் கூட்டம் கூடுச்சுன்னு எல்லோரும் பேசுறாங்க… தேவையில்லாம குக்கரை கூப்பிட்டதால விசில் தான் பறந்துச்சே தவிர, நம்ம உழைப்பு வீணாப் போயிடுச்சேன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்… அதை பற்றி கவலைப்படாதீங்க அதை நான் பார்த்துக்கிறேன் என்று அவர்களை சமாதானப்படுத்தினாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மதில் மேல் பூனையாக யார் இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கிறதால நம்ம மேலே இருக்கிற நம்பகத்தன்மை போயிருச்சுனு இப்போது மாம்பழ கட்சி சொந்தங்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம். தாமரை கட்சியோடு டெல்லில கூட்டணி, மாநிலத்துல இல்லைனு சொல்ற லாஜிக் என்னன்னே புரியல. நம்ம அய்யா, கட்சி ஆரம்பிச்சு கால் நூற்றாண்டை கடந்தும் நெய்வேலில ஏதோ போராட்டம் பண்றோம். அதையும் கூட, கூட்டணிக்கு யாராவது வலிய வந்து அழைக்கவும், சீட் பேரம் பேசவும்தான் இந்த போராட்டத்தை பண்றோம்னு மக்கள் அதையும் கிண்டல் பண்றாங்க. அதனால, இப்ப நம்ம கூட்டணி எந்த கட்சியின் பக்கமுன்னு தெரியல என்று புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாநாட்டுக்காக கரன்சிகளை இறைக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Salem ,Uncle ,Peter ,Thenikaran ,Salemkar ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...