×

ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் சார்பில் கம்பம் மலையடிவாரத்தில் கனிமவளங்கள் ஆய்வு: பசுமை பள்ளத்தாக்குக்கு பாதிப்பு என விவசாயிகள் அச்சம்

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் சார்பில் கனிமவளங்கள் ஆய்வு நடக்கிறது. ஆழ்துளையிட்டு கனிமங்களின் மாதிரி சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் பள்ளத்தாக்கில் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள புவியியல் ஆய்வு மையம், ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பாகும்.

இந்த அமைப்பு பூமிக்கு கீழ் உள்ள எக்கு, நிலக்கரி, உலோகம், கனிமங்கள், மினரல் குறித்த தகவல்களை ஆய்வு செய்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் புவியியல் சிறப்பு வரைபடங்கள் மற்றும் மண்டல வரைபடங்கள் தயாரித்தல், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறியும் பணியை மேற்கொள்கிறது.

கம்பம் பகுதியில் ஆய்வு:
இந்நிலையில் ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் சார்பில் கம்பம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அதிர்வில்லாத ஆழ்துளை இயந்திரம் முலம் துளையிட்டு மண், கற்கள், பாறை (கோர்) சாம்பிள் எடுத்து வருகின்றனர். 20 அடி முதல் 30, 40, 50, 200 அடி வரை துளையிட்டு கனிமங்களின் கோர் சாம்பிள் சேகரித்து, தனித்தனி பெட்டிகளில் அடைத்து, அவைகளை ஆய்வு செய்ய ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இப்பணியில் கொல்கத்தா, ஒடிஷா, கேரளம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வு தேனி மாவட்டத்திற்கு நியூட்ரினோ போல் மற்றுமொரு ஆபத்து எனவும், மேலும் பசுமை மிகுந்த கம்பம் பள்ளத்தாக்கை சீர்குலைக்கும் முயற்சியாகும் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு நீராதாரம் மற்றும் நிலவளம் மிகுந்த பகுதியாகும். முல்லைப்பெரியாறு மூலம் பாசன வசதி பெறும் இப்பள்ளத்தாக்கு, தமிழகத்தில் காவிரி, பவானி சாகருக்கு பிறகு மூன்றாவது பெரிய பாசனப்பரப்பாகும். இந்த பசுமை பள்ளத்தாக்கை சீர்குலைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் நியூட்ரினோ ஆய்வகம். தற்போது மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கார்ப்பனேட் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரிய உலோகங்களை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப் பணியை, கடந்த ஏப்ரலில் தொடங்கி 2024 மார்ச் வரை நீடிக்க திட்டமிட்டுள்ளது இந்திய புவியியல் ஆய்வு மையம். ஆய்வு மைய மண்ணியல் ஆய்வாளர்கள் 2.2 சதுர கி.மீ பரப்பை அளவீடாகக் கொண்டு, 15 செங்குத்து ஆழ்துளை கிணறுகள் மூலம் 900 மீட்டர் ஆழத்தில் துளையிடும் பணியில் இறங்கியதோடு, நான்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் முடித்து விட்டார்கள்.

ஏற்கனவே கம்பம் நகரில் சில இடங்களில் ஆறடி ஆழத்திற்கு தோண்டினாலே தண்ணீர் வந்து விடுகிறது. அந்த அளவிற்கு நிலத்தடி நீர் கம்பம் நகரில் செறிவுற்று காணப்படுகிறது. இதனால் கம்பத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஆபத்து என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்த பின்பும், நாங்கள் அரியவகை கனிமத்தை தேடுகிறோம் என்கிற பெயரில் இந்திய ஆய்வு மையம் இறங்கி இருப்பது சரிதானா?

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் விஜயகுமார் பெயரில் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. அது உண்மைதானா என தெரியவில்லை. தேனி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றுதான் இவர்கள் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்களா? வனவளமும், நிலவளமும் மிகுந்த கம்பம் மெட்டை இந்திய புவியியல் ஆய்வு மையம் குறி வைக்க காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் பூமியை தோண்டும் இடங்களில், விவசாய சங்க பிரதிநிதிகள் ஒன்று திரண்டு ஆய்வு வேலையை தடுத்து நிறுத்துவோம்’ என்றார்.

இந்த ஆய்வுபணி குறித்து ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. தற்போது கம்பம்மெட்டு அடிவாரப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கனிமவளங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூமிக்கடியில் எஃகு, நிலக்கரி, உலோகம் போன்றவை குறித்த தகவல்களை கண்டுபிடிக்க இந்த டிரில்லிங் முறை பயன்படுத்தப்படுகிறது. கோர் சாம்பிள் எடுத்து அனுப்புவது எங்கள் குழுவின் பணி. தமிழகத்தில் ஏற்கனவே சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இதுபோல் கோர் சாம்பிள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் தற்போது 200 அடி வரை மட்டுமே (சுமார் 60 மீட்டர்) தோண்டப்பட்டு சாம்பிள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆய்வுகளில் மட்டுமே இப்பகுதியில் பெருங்கனிமங்கள் அல்லது சிறு கனிமங்கள் உள்ளது தெரிய வரும்’ என்றார்.

ஆய்வு மையத்துக்கு செல்லும் கனிம சாம்பிள்கள்
இந்த ஆய்வின்போது நிலத்தில் உள்ள கனிமங்கள் சேகரிக்கப்பட்டு அதனை டெல்லி, ஐதராபாத், கல்கத்தா உள்ளிட்ட ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பெருங்கனிமங்களான பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், கிராபைட் வெர்டிகுலைட், தங்கம், பிளாட்டினம், வைரம், லித்தியம், சிறு கனிமங்களான சாதாரண கற்கள், மண், கிராவல், தீ களிமண், பல வண்ண கிரானைட், கருப்பு கிரானைட் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு புவியியல் மற்றும் சுங்கத்துறைக்கு அறிக்கை சமர்பிக்ககின்றனர்.

The post ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் சார்பில் கம்பம் மலையடிவாரத்தில் கனிமவளங்கள் ஆய்வு: பசுமை பள்ளத்தாக்குக்கு பாதிப்பு என விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Union Govt Geological Survey Center ,Kambam ,Green Valley ,Gampam ,Gampam Valley ,Survey ,Union Government ,Union Govt ,Dinakaran ,
× RELATED கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில்...