×

ஆந்திராவில் நடப்பது சைக்கோ ஆட்சி: சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திராவில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடக்கிறது. இதையொட்டி தெலுங்கு தேச கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு கடந்த சில மாதங்களாக ரோடுஷோ நடத்தி வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த தொகுதியான கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் சந்திரபாபு நேற்றிரவு ரோடுஷோ நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் புதிய திட்டங்கள் எனக்கூறி ரூ.12,000 கோடிக்கு நீர் பாசன திட்டங்களை தொடங்கி கொள்ளையடிக்கின்றனர்.

மாநிலத்தில் எந்த கான்ட்ராக்டருக்கும் சரிவர பணம் தரப்படவில்லை. ஆனால் கான்ட்ராக்டராக உள்ள அமைச்சர் ராமச்சந்திராரெட்டிக்கு மட்டும் ரூ.600 கோடி கான்ட்ராக்ட் பணத்தை கொடுத்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறை மட்டும் முதல்வர் ஜெகன்மோகன், தவறாமல் டெல்லிக்கு சென்று வருகிறார். எதற்காக அடிக்கடி டெல்லிக்கு செல்கிறார், என்ன மர்மம் நடக்கிறது என தெரியவில்லை. புலிவேந்துலா தொகுதி மக்கள் ஒரு சைக்கோவை வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் அந்த சைக்கோ, பல சைக்கோக்களை உருவாக்கி இருக்கிறார். ஆந்திராவில் நடப்பது சைக்கோக்களின் ஆட்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் சந்திரபாபு பேச தொடங்கியபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொடி பொருத்திய காரில் 5க்கும் மேற்பட்டவர்கள் `ஜெய் ஜெகன்’ என கோஷமிட்டபடி வந்தனர். இதைக்கண்ட தெலுங்கு தேச தொண்டர்கள் உடனடியாக அந்த காரை ஓடஓட விரட்டியடித்தபடி கற்களை வீசினர். இதனை அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் கண்டு, சந்திரபாபுவின் கண்முன் அவரது கட்சி தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆந்திராவில் நடப்பது சைக்கோ ஆட்சி: சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chandrababu ,Tirumala ,Lok Sabha elections ,Telugu Desa Party ,
× RELATED ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா?...