×

ஆடியில் (நதியில்) நீராடினால் தேடி வரும் தெய்வ அருள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது – ஆடிப் பெருக்கு – 3.8.2023

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

1. முன்னுரை

நம் ஆன்மிகம் இயற்கையோடு இணைந்தது. இங்கே மண், மலை, வானம், கடல், நதி, மரம், செடி, பறவை, பாம்பு என ஒவ்வொன்றும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய அனைத்தையும் ஆன்மிக ரீதியாகவே காண்பது நமது மரபு. இப்படிப் பல பொருள்கள் இருந்தாலும் ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான ஆதாரப்பொருள் என்பது நீர்நிலை தான். இந்த உயிரே நீரில் உருவாகி, நீரில் கரைகிறது. இதற்கு இடையில் வாழ்வதற்கும் ஆதாரமானது நீர்தான் என்பதால், தன்னுடைய உயிராக நீர் நிலையை நேசித்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.

2. நதிக்கரையில் நாகரீகங்கள்

நீர் இன்றி உயிர்கள் இல்லை. ‘‘நீரின்றி அமையாது உலகு’’ என்றான், வள்ளுவன். ‘‘விசும்பின் துளிவீழில் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலை காண்பது அரிது’’. இந்த நீர் என்பது ஆற்றுநீராகவும், ஊற்று நீராகவும் பல வடிவங்களில் இருக்கிறது. ஆறு என்பது வழியையும் குறிக்கும். (நீர் போகும் பாதை) மனித நாகரீகங்கள் எல்லாமே ஆற்றின் கரையிலே தான் தொடங்கின. நாகரீகத்தை கெடிலக்கரை நாகரீகம், காவேரிக் கரை நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் என்றெல்லாம் நதியின் பெயரை ஒட்டியே சொல்லும் வழக்கம் உண்டு. இந்த நதிக்கரை தான் ஆன்மிக வளர்ச்சிக்கு அருந்துணைபுரிந்தது.

3. புனித நதிகள்

நம்முடைய ரிஷிகள், மகான்கள் தங்களுடைய இலக்கிய, காவிய, ஆன்மிகப் படைப்புகளை எல்லாம் நதிக்கரையில்தான் படைத்தனர். பல புராணக் கதைகள், தத்துவங்கள், ஆத்ம விசாரங்கள் எல்லாமே நதிக்கரையில் உருவானவைதான். ஒரு புராணத்தை ஆரம்பிக்கும் பொழுதே கங்கைநதி கரையிலே மகரிஷி இந்த புராணத்தைச் சொன்னார். சூதமுனிவர் இந்தப் புராணத்தை சொன்னார் என்றுதான் ஆரம்பிப்பர். பெரும்பாலான பள்ளிக் கூடங்களும் ஆதிகாலத்தில் குருகுலங்களாக நதிக்கரையில் தான் அமைந் திருந்தன. புண்ணியமான பல செயல்கள் இந்த நதிக்கரையில் நடந்ததால்தான் அவைபுனிதம் பெற்றன. அல்லது புனிதம் பெற்ற நதிக்கரையில் இந்தச் செயல்கள் எல்லாம் நடந்ததால்தான் செயல்கள் புனிதம் அடைந்தன என்று சொல்லலாம்.

4. மூர்த்தி, தலம், தீர்த்தம்

தீர்த்தம் என்பது அமுதமயமானது. புனித மயமானது. நல்ல செய்திகளைச்சொல்லி மக்களை வழி நடத்தியவர்களை தீர்த்தங்கரர்கள் என்று சொல்லுகின்ற மரபும் உண்டு. இப்பொழுதும் கோயில்களில் குறிப்பாக வைணவ ஆலயங்களில் முதல் மரியாதை பெறுபவரை தீர்த்தக்காரர் (முதல் தீர்த்தக்காரர்) என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஒரு திருத்தலத்தின் பெருமை, பூஜைகள், வழிபாடு எல்லாமே தீர்த்தத்தோடு இணைந்ததுதான். திருத்தலத்தின் பெருமை என்பது மூர்த்தியாலும், தலத்தாலும், தீர்த்தத்தாலும் முறையால் சொல்லப் படுவது. தீர்த்தப் பெருமை இல்லாத தலங்களே இல்லை. அது குளமாக இருக்கலாம். பக்கத்தில் ஓடுகின்ற ஆறாக இருக்கலாம். ஆற்றின் கிளை நதியாக, வாய்க்காலாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்திற்கும் தலத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

5. நாட்டினுடைய உயிர் அமுதம்

எந்தக் காவியம் பாடுபவர்களாக இருந்தாலும், முதலில் அந்த நாட்டின் சிறப்பைச் சொல்லி, அதற்குப் பிறகு தீர்த்தத்தின் சிறப்பைச் சொல்லி, அதற்குப் பிறகு அந்த நகரத்தின் சிறப்பைச் சொல்லி, பிறகுதான் அரசரின் சிறப்பைச் சொல்லுகின்ற மரபு உண்டு. ராமாயணம் ஆரம்பிக்கும்போது பால காண்டத்தில் அயோத்தி நாட்டின் சிறப்பையும், வளமையும் சொல்லிக்கொண்டு, இத்தனை வளமைக்கும் காரணமான சரயு நதியின் சிறப்பை கம்பன் பாடுகின்றான். அதுதான் அந்த நாட்டினுடைய உயிர் அமுதம் என்று குறிப்பிடுகின்றான்.

இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.

6. புனித நீராட்டம்

பொதுவாக நம்முடைய நாட்டிலே எத்தனையோ நதிகள் இருக்கின்றன. அந்த நதிக்கரையிலே புகழ்பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன. திருத்தலங்களுக்குச் செல்வது என்பதே புனிதநீர் ஆடுவதற்காகத் தான் என்பார்கள். காரணம் புனித நீராடுதல் என்பது ஆன்மிகத்தினுடைய அடிப்படையான ஒரு விஷயம். உதாரணமாக, ராமாயணத்தில் ராமரை 14 ஆண்டுகள் காட்டிற்கு அனுப்புகின்றபொழுது கைகேயி சொல்லும் ஒரு அருமையான பாடல் ஒன்று. ‘‘ராமா, பரதன் இந்த நாட்டை ஆள வேண்டும். நீ 14 ஆண்டுகள் வனம் போக வேண்டும்.’’அதோடு கைகேயிவிட்டு இருக்கலாம். ஆனால், வனம் போய் ராமன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதிலே சொல்வதைகவனிக்க வேண்டும்.

‘‘ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழிரும் சடைகள் தாங்கி தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணி புண்ணியத்
துறைகளாடி
ஏழு இரண்டு ஆண்டில் வா’’
ஆக தவத்தின் ஒரு பகுதி புண்ணிய நதிகளில் நீராடுவது.

7. நதிகளின் புனிதத் தன்மை காப்பாற்றப்பட வேண்டும்

நதிகளின் புனிதத் தன்மை என்பது நதிகள் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்கின்ற சிந்தனையை நமக்கு விதைக்கின்றன. அது ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. நதிகள் எப்பொழுதும் தூய்மையாகவும் நல்லவிதமாகவும் பராமரிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஆனால், நடைமுறையில் நாம், இதே ஆன்மிகத்தின் பேரில் நதிகளை, பல இடங்களில் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது வேறு செய்தி. ஒரு நதியில் நம்முடைய பாவங்களைக் கழுவுகிறோம் என்று சொன்னால், அந்த நதியை நாம் மிக அற்புதமாக பராமரிக்க வேண்டும். தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

8. நதிகளில் பாவம் செய்யக்கூடாது

நதிகளை அசுத்தப்படுத்திவிட்டு, நாம் சுத்தப்படுத்திக்கொண்டுவிட முடியாது. நதிகள் புண்ணிய நதிகளாக இருப்பதால் அங்கே செய்கின்ற பாவங்கள் ஒவ்வொன்றும் பல மடங்கு பாவப்பலனை தருவது என்பதையும் நாம் பல புராணங்களிலே பார்க்கின்றோம். இனியாவது அந்த நிலை மாற வேண்டும் பிராயச் சித்தம் என்கின்ற பெயரிலே, அந்த நீர்நிலைகளில் நீராடுகின்றபொழுது, நம் முடைய பழைய துணிகளை எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடுவதும், நம்முடையபல்வேறு விதமான அழுக்குகளை அந்த நதி நீரில் கொண்டு போய் கரைப்பதும், பிளாஸ்டிக் முதலிய குப்பைகளை நதிகளில் சேர்ப்பதும் சரியல்ல. அது பாவம் தீர்க்கப்போய் பாவத்தை வாங்கி வந்து விடுவதுபோல ஆகிவிடும்.

9. தலபுராணங்களில் நதிகளின் பெருமை

பெரும்பாலான கோயில்கள் நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. அபிஷேகங்களுக்கு தீர்த்தம் கொண்டு வரும் தூரத்திலேதான் அவைகள் இருக்கும். அல்லது பிரதானநதியின் கிளை நதியின் கரைகளிலே இந்த திருத்தலங்கள் இருக்கும். அதனால்தான் ஒரு திருத்தலத்தை குறிப்பிடுகின்றபொழுது காவிரிக்கரை திருத்தலங்கள், தாமிரபரணி திருத்தலங்கள் என்று நதியின் பெயர் சொல்லி குறிப்பிடுகின்றோம். எந்தக் கோயில்தல புராணத்திலும் அதன் அருகில் உள்ள நதியின் பெருமை குறிப்பிடப்பட்டிருக்கும். அங்கு நீராடி விட்டுத் தான் மூர்த்தியையே தரிசிக்க வேண்டும். தீர்த்த தரிசனம்தான் முதலில். பிறகுதான் கோபுர தரிசனம். பிறகு ஆலய விருட்ச தரிசனம். பிறகு பிரகார மூர்த்திகள் தரிசனம். நிறைவாக மூல மூர்த்தியின் தரிசனம்.

10. பாவங்கள் தீர இதுவே வழி

புண்ணியநதிகளில் நீராடுவது என்பது நம் பாவங்களை நீக்கிக்கொள்ளும் வழிமுறையாகும். பஞ்சபூதங்களில் தண்ணீருக்கு ஒரு பெரிய ஏற்றம் உண்டு. நதி எதையும் தூய்மையாக்கி விடும். தண்ணீர் வறண்ட பிரதேசத்தையும் பசுஞ்சோலையாக மாற்றிவிடும். இந்த சக்தி நதிகளுக்கு உண்டு என்பதால், கருடபுராணம் தீர்த்தயாத்திரையின் மிக முக்கியமான அம்சமான புனிதநதிகளில் நீராடி பித்ரு கடன்களை கழிப்பதை சிறப்பாகக் கூறுகிறது. இதனை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு நிலை ஆசிரமங்களில் உள்ளவர்களும் செய்யலாம். செய்ய வேண்டும். நதியில் நீராடி, பிதுர் கடன் செய்யும் பொழுது நாமும் நமக்கு முந்திய ஏழு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களும் பிறவிப் பயனை அடைகின்றனர்.

11. எல்லா நதிகளும் அவன் காலடியில்

தீர்த்தத்தைக் கண்டவுடன் அதனை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும். அதனை கைகளில் அள்ளி தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். தீர்த்தங்களை அசுத்தப்படுத்துவது என்பது நூறு முறை பாவம் செய்வதற்குச்சமமான தோஷத்தைக் கொடுக்கும்.

‘மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும்
மூன்றையும் தொழுவார்க்கு
வார்த்தை சொல்ல சற்குரு வாய்க்குமே’
என்பார் தாயுமானவ சுவாமிகள்.

ஸ்ரீமன் நாராயணன் என்ற சப்தம் நீரைக் குறிக்கிறது. எனவே தீர்த்தத்துக்கு பகவான் என்ற பெயர் உண்டு. பகவான் சமுத்திரத்தில் பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கிறான். எல்லா நதிகளும் அவன் காலடியில் சேருகின்றன என்பதை மறந்து விடக்கூடாது. அவருடைய திவ்ய நாமத்தையும் நதியின் அல்லது புஷ்கரணியின் பெயரையும் சொல்லி நீராடுவது உடலை மட்டுமல்லாது, மனதையும் தூய்மைப்படுத்தும் வழியாகும்.

12. புனிதமான நவதீர்த்தம்

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆறுகள் இருந்தாலும், இந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஒன்பது ஆறுகளை மிகப்புனிதமாகக் கருதுவர். அவைகளில் நீராடுவதைத்தங்கள் வாழ்வின் மிகபெரும் பேறாகக் கருதுவர். அந்த ஒன்பது நதிகள். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை ‘‘கங்கைநதியாதி நவ தீர்த்தக் கரை நாட்டுள்’’ என்று இதனை சைவநெறி நூல்கள் கூறும்.

இவற்றில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிட்டி நற்கதியை அடைவார்கள் என நம்புவர். இந்த நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரித்தாலே, அவற்றில் நேரிடையாகக் நீராடிய பலன் அடைவர் என்றும் சொல்வர். நதியின் எல்லா இடங்களிலும் நீராடுவதைவிட குறிப்பிட்ட தீர்த்தக் கட்டங்களில் நீராடுவதுதான் விசேஷம்.

13. தீர்த்த யாத்திரை நிறைவு

கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப் படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலைக் கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத்தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. காசியாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடுவதில் தான் முடிகிறது. ராமேஸ்வர யாத்திரை என்பது காசியில்தான் நிறைவு பெறுகிறது. இந்த நீராடுதல் மூலம்தான் தீர்த்த யாத்திரை நிறைவு பெறுகிறது.

14. ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம்

வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரயூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. மகாபாரதமும் ஆரண்ய பருவத்தில் 190-வது அத்தியாயத்தில் 95-வது ஸ்லோகம் தாமிரபரணியின் பெருமையைக் கூறுகிறது. தாமிரபரணி பொதிகை மலையில் எந்த இடத்தில் உற்பத்தி ஆகிறது என்பதை இதுவரை யாரும் அறியவில்லை. யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மரம், செடி, கொடி வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த தாமிரபரணியில் உள்ள தீர்த்தக் கட்டங்கள் பற்பல உள்ளன.

அதில் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும் இடம் முறப்பநாடு ஆகும். தாமிரபரணியின் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம். ஆடி மாதத்தில் புதுநீர் பெருகும் பதினெட்டாம் பெருக்கின் போது, காவிரியில் சீர் செய்வது போலவே தென் தமிழக மக்களும் தாமிர பரணியை நிறைமாத கர்ப்பிணியாகக் கருதி சீர் செய்கின்றனர். மங்கள பொருள்களைப்பரிசாக அளிக்கின்றனர். மாங்கல்ய சரடை மாற்றிக் கொள்கின்றனர்.

15. புஷ்கரம்

புஷ்கரம் என்பதற்கு நீர், வருணன், தாமரை, பன்னிரண்டு ஆண்டுகள் போன்ற பல பொருள்கள் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை இந்தியாவின் பன்னிரண்டு முக்கிய நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுகிறது. இந்தியாவின் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

குரு பகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த நதிக்கு புஷ்கரம் வருகிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசி உண்டு. புஷ்கரம் என்பது சாதாரணமாக ஓராண்டு காலம் கொண்டாடப்படும் விழா. அதில் முதல் 12 நாட்கள், ஆதிபுஷ்கரம், கடைசி 12 நாட்கள், அந்தியபுஷ்கரம். இவ்விரண்டுமே முக்கிய விழா நாட்கள். புண்ணிய நதிகளில் நீராடி, மக்கள் தங்கள் பாவங்களைத் தொலைக்கின்றனர். நதிகள் அப்பாவங்களை ஏற்று அசுத்தம் ஆகின்றன. மனிதர்களால் தமக்கு ஏற்பட்ட பாவங்களைச் சுமக்கும் நதிகள் புஷ்கர சமயத்தில் புனிதம் அடைகின்றன.

16. எப்படி நீராட வேண்டும்?

நீராட்டத்தை “பக்தியில் நனைதல்” என்றே சமய நூல்கள் சொல்கின்றன. வெறும் தண்ணீரில் நீராடினால் உடம்பு அழுக்குகள் போய்விடும். புனித நதிகளில் நீராடினால் புற அழுக்குகளோடு அக அழுக்குகளும் நீங்கும். உள்ளம் தெளிவடையும். பக்தியில் மனம் லயிக்கும். இந்த உணர்வோடுதான் புனித நதிகளில் நீராட வேண்டும். நீராடும்போது, மானசீகமான சொல்லும் ஸ்லோகம் இது.

கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி.
நர்மதே சிந்து காவேரீ ஜலே அஸ்மின்
ஸன்னிதிம் குரு.

ஸ்நானம், தவம், ஜெபம், ஹோமம், ஸ்ரார்த்தம், தானங்கள் இவைகளை நதிக்கரையில் செய்ய வேண்டும். அதுவும் பகலிலேயே தான் செய்ய வேண்டும். பொதுவாக சூரியன் உதிப்பதற்கு முன் அருணோதய வேளையில் நீராட வேண்டும். நீராடுவதற்கு முன் அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலியவற்றையும் சொல்லி, புனித நதிகள் ஆக இருப்பின் அதன் பெயரையும் குறிப்பிட்டு சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

17. என்ன செய்யக்கூடாது?

எந்த நதியாக இருந்தாலும் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்பும் இடம் மிகப் புனிதமானது. காசிக்கு சமமானது என்பார்கள். அந்த கட்டம் (இடம்) புனித நீராட ஏற்றது. எப்படியும் அந்த இடத்திற்கு அருகில் நிச்சயம் ஒரு புகழ் பெற்ற ஆலயம் இருக்கும். அடுத்து நதியில் நீராட ஒரு முறை உண்டு. நதியில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி, இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும்.

மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை, உள்ளங்கையில் எடுத்து, மஹாவிஷ்ணுவின் நாமங்களைச்சொல்லி உட்கொள்ள வேண்டும். பின், தலையில் சிறிதளவு தெளித்துக் கொள்ள வேண்டும். முதல்முறை மூழ்கும்போது, கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும். நீராடும்போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது.

நதிகளில் எச்சில் துப்பக்கூடாது. நீராடும்போது நீருக்குள்ளேயே சிறுநீர் கழித்தலும் கூடாது. செருப்புக் காலோடு நதிகளில் இறங்கக்கூடாது. நீண்ட தலைமுடி கொண்ட ஆண்களும், பெண்களும் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. இனி, சில முக்கியமான நதிகளை குறித்தும், அதன் கரையிலுள்ளதலங்களைக் குறித்தும் காண்போம்.

18. கண்டகி ஆறு

நாராயணி மற்றும் கந்தக் என்றும் அழைக்கப் படும் கந்தகி ஆறு, நேபாளத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும் நேபாளத்திலுள்ள ஹரிபர்வத மலையில் சக்கர தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தப்பகுதியில் இருந்து கண்டகி நதி உற்பத்தியாகிறது. தற்போது இந்த இடத்திற்கே ‘சாளக்கிராமம்’ என்ற பெயர் வந்து விட்டது. விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படும் சாளக்கிராமக்கற்கள் இங்குதான் உற்பத்தியாகின்றன. ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிநீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.
என்று திருமங்கையாழ்வார் – பெரிய திரு மொழியில் பாடியுள்ளார்.

19. கெடில நதி

கெடிலம் ஆறு என்பது இந்தியாவின், தமிழகத்தின் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாகப் பாயக்கூடிய ஆறு ஆகும். சங்கராபுரம் மையனூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே, வங்கக்கடலில் ஐக்கியமாகிறது. இந்நதிக்கரையில்தான். தமிழ், மண்ணில் கால்பதித்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டியது இந்த நதியின் முகத் துவாரத்தில்தான். 108 திருத்தலங்களில் ஒன்றான திருவந்திபுரமும், சைவத்தில் புகழ் பெற்ற பாடலீஸ்வரர் கோயிலும் இந்நதிக்கரையில் அமைந் துள்ளன.

சிவபெருமானின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளே, கெடில நதியாக உருவானது என்கிறது பாதிரிப்புலியூர் புராணம். வைணவத்தில் கருட பகவான் கொண்டு வந்த நதி என்ற பொருளில் கருட நதி என்பார்கள். தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரும், மருள்நீக்கியார் எனப்படும் அப்பர் பெருமானும் அவதாரம் செய்தது இக்கெடில நதிக்கரையின் திருநாவலூர் மற்றும் திருவாமூர் கிராமங்களில்தான். “பழனஞ்சேர்கழனித் தெஞ்சின் மாலைநீர் கிழிய கோடி அதனிடை மணிகள் சிந்தும் கெடிலம்” என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

20. மணிமுத்தாறு

ஒரே நதியின் பெயர் வெவ்வேறு இடங்களில் இருப்பதுண்டு. உதாரணமாக மணிமுத்தாறு தமிழகத்தின் தென்பகுதியிலும் இருக்கிறது. வடபகுதியிலும் இருக்கிறது. தென்பகுதியில் உள்ள மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. வடக்கே உள்ள மணிமுத்தாறு நதி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும்.

இந்த ஆறு சேத்தியாத்தோப்புக்கு அருகில் வெள்ளாற்றுடன் இணைகிறது. அந்த புனிதமான இடத்தில் திருக் கூடலையாற்றூர் எனும் தேவாரப்பாடல் தலம் உள்ளது. சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) சென்றபோது, இத்தலத்தை வணங்காமற் செல்ல, இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல; சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்க, ‘கூடலையாற்றூருக்கு வழி இஃது’ என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு. பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

21. பழமலைநாதர் கோயில்

மணிமுத்தாறு கரையில் அமைந்துள்ளதுதான் புகழ்பெற்ற விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில். சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், விசயேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிர பேதேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர் (வீரட்டேஸ்வரர்), ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. காசியைவிட வீசம் (தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால், விருத்தகாசி என்கிற சிறப்புப் பெயரும் இவ்வூருக்கு உண்டு. மாசி மக தீர்த்தவாரி இந்த மணிமுக்தா நதியில்தான் நடைபெறும்.

22. பஞ்சசார தலம்

சைவத்தில் எப்படி ஐந்து சிறப்போ, அதைப்போல வைணவத்தில் 5 என்ற எண் சிறப்பாக உள்ள கோயில் திருச்சேறை. கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ள இந்தத் தலத்தில் எல்லாமே ஐந்துதான். இதுவும் புனிதமான காவிரிநதியின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட தலம். திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்ற தலம். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்த தலம். மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம். ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் எனக் கேட்டு, இத்தல சார புஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத் தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள்.

இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம். இங்கு புனித நீராடுவது சிறப்பு.

23. கூவம் ஆறு

இன்று கூவம் ஆறு என்பது கழிவு நீர் ஓடும் சிறு ஆறாக அல்லது வாய்க்காலாகக் கருதப்படுகிறது. ஆனால், கூவம்நதியின் தொன்மையும், அதன் கரையில் அமைந்துள்ள திருத்தலங்களையும், ஒரு காலத்தில் இது புனித நீராடுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது என்பதையும் நாம் மறந்து விட்டோம். திரு.வி.கல்யாண சுந்தரம் ஒரு கட்டுரையில், ‘இன்று கூவத்திலே ஆனந்தமாகக் குளித்துவிட்டு, திருவல்லிக்கேணி கோயிலுக்குச் சென்றேன்’ என்று குறிப்பிடுகிறார்.

கூவம் சென்னை நகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்று, அடையாறு, கொற்றலை ஆறு ஆகியவை மற்ற இரு ஆறுகள். ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. ரோமாபுரி மன்னர்கள் இந்த ஆற்றின் வழியே வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்கள் புதை ஆய்வுகளில் கிடைத்துள்ளன. ரோம் தேசத்து வைன் ஜாடிகள், நாணயங்கள் இந்த ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆற்றின் கரையில் புகழ் வாய்ந்த பல கோயில்கள் கட்டப்பட்டன.

24. புனிதநதி மாசடைந்துபோனது

கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. திருவல்லிக்கேணி நதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த நதி சுமார் 72 கி.மீ நீளம் கொண்டது, இதன்கரையில் இலம்பையங் கோட்டூர், திருவிற்கோலம் மற்றும் திருவேற்காடு ஆகிய பாடல்பெற்ற தலங்களும், எழுமூர் மற்றும் நெற்குன்றம் ஆகிய வைப்புத்தலங்களும் உள்ளன. சென்னையின் பிரசித்தி பெற்ற சைவ வைணவக் கோயில்கள் அனைத்தும் இந்த மூன்று ஆறுகளின் கரைகளில் அமைத்துள்ளன எனக் கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் கூவம் நதி சுத்தமான தண்ணீர் ஓடும் நதியாக இருந்தது. சென்னை மக்கள் அதில் குளித்துவிட்டுத்தான் தங்கள் தினசரி வேலையைத் தொடங்குவார்கள். வள்ளல் பச்சையப்ப முதலியார் தினமும் கூவம்நதியில் ஆசை தீரக் குளித்ததை எழுதி வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் 1754 முதல் 1794. வாரணாசி, கயா போலவே கூவமும் மோட்ச ஷேத்திரங்களுக்கு ஒப்பானது என்று கேசவரத்திலுள்ள கைலாச ஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. இவ்வளவு சிறப்பு இந்த நதிக்கு இருப்பதை உணர்ந்தாலே நதிகளை மாசாக்குவதை குறைத்துக் கொள்ளலாம்.

25. மண்ணியாறு

புனித நாட்களில் புனித நதிகளில் நீராடி, நம் பாவங்களைக் கழுவிக்கொள்ளும் நாம், ஒவ்வொரு நதியின் அல்லது ஒவ்வொரு நீர்நிலையின்வரலாற்றையும், புனிதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி எத்தனை நதிகள் நம்முடைய தமிழ்நாட்டில் இருந்தன தெரியுமா? அப்படிப்பட்ட நதிகளில் ஒன்றுதான் மண்ணியாறு. திருவைக்காவூர் திருபுறம்பயம், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள், திருப்பந்தனை நல்லூர் ஆகிய ஊர்களின் வழியாக ஓடும் இங்கே உள்ள சேங்கனூரில் தான் வைணவத்தின் பிரசித்தி பெற்ற ஆசார் யரான பெரியவாச்சான் பிள்ளை அவதாரம் செய்தார். சைவத்தின் பிரசித்தி பெற்ற சண்டேஸ்வர நாயனார் மணலால் சிவலிங்கம் அமைத்து நாள்தோறும் வழிபாடு புரிந்தார். இந்த மண்ணியாறு பராந்தகச் சோழனால் திருத்தி அமைக்கப்பட்டுதன் சிறப்புப் பெயரான குஞ்சரமல்லன் என்னும் பெயரை வைத்துள்ளான்.

26. பஞ்ச நதிகள் பாயும் திருவையாறு

ஞானம், பக்தி, வைராக்கியம், தியாகம், திருவடிப் புகல் என்னும் ஐந்து ஆறுகள் (குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, காவிரி) மூலம் ஐயாற்றீசனை மக்கள் அடையக்கூடும் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் ஐந்து ஆறுகள் உள்ள நகரமே திருவையாறு. இறைவன் ஸ்ரீபஞ்சநதீஸ்வரர், ஐயாறப்பர், பிரணதார்த்தி ஹரன் என்றும், இறைவி தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். எமனைத்தடுத்து ஆட்கொண்டார் சந்நதி இங்கு பிரசித்தமானது.

இவருக்கு வடைமாலை சாத்தி குங்கிலியம் வாங்கி தீக்குழியில் போட்டு எரியவிட்டால் எம பயம் வராது. சிவனுக்கு வடைமாலை சாற்றுவது என்பது வேறு எந்தத் தலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு. ஆடி அமாவாசை அன்று அப்பருக்குக் கயிலாயக் காட்சியை அருளி, பூலோகத்தில் உள்ள கயிலாயம் திருவையாறுதான் என்று சிவபெருமானால் கூறப்பட்ட தலம். சுந்தரர் இறைவனைத் தரிசிப்பதற்காகக் காவிரி வழிவிட்ட தலம். சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம். மார்கழி மாதம் பகுள பஞ்சமியன்று ஸ்ரீதியாகராஜரின் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம், திருவையாறில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

27. சரபங்கா ஆறு

சரபங்கா ஆறு தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆற்றின் மூலமானது சேர்வராயன் மலை. சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவ மியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது. ஏற்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் அருவியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது. ஓமலூர் பகுதியில் உள்ள இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றும் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்ததாகவும் திகழ் கிறது. அதேபோல் இந்நதிக்கரையில் தாதாபுரம் பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியம்மன் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற அம்மனாகவும் திகழ்கிறாள்.

28. பவானி

பவானி என்ற பெயருக்கு ‘‘உயிரைக் கொடுப்பவர்’’ என்று பொருள் சொல்கின்றனர். பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்று. இது சங்க இலக்கியங்களில் வாணி எனக் குறிப்பிடப்படுகிறது. நீலகிரி மலைத்தொடரில். உள்ள குந்தா மலைப்பகுதியில் தென்மேற்கு மூலை முகட்டில் உருவாகிறது. மலை முகட்டிலிருந்து கீழிறங்கி தென்மேற்காகக் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து, கிழக்கு நோக்கித்திரும்பி, சிறுவாணி ஆறுடன் இணைந்தபின் மீண்டும் தமிழகத்துக்குள் நுழைகிறது. மேட்டுப்பாளையம் அருகேசமவெளியை அடைகிறது. அற்புதமான ஆலயங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடிமாதம், 18-ஆம் நாள் அன்று, நதிக்கரையோரம் சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப்பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, வணங்குவர். மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள்கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, நதித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.

29. பவானி கூடுதுறை

“தென் திரிவேணி சங்கமம்” என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்தநதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது. இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். காவிரிநதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழில் சூழ்ந்த தீவுபோல காட்சியளிக்கும் திருத்தலம் இது. திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதரால் பாடல் பெற்றதுடன், புராண வரலாற்றை உடைய இக்கோயில், சைவ, வைணவ சமரசத்தை உலகுக்கு உணர்த்திவருகிறது. இந்த தலத்துக்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி என நான்கு மலைகள் உள்ளன.

30. நிறைவுரை

கோயில்களுக்குப்பிரசித்தி பெற்ற தேசம் பாரத தேசம். அந்தக் கோயில்களில் பெரும்பாலான கோயில்கள் தென்னகத்தில்தான் உள்ளன. தென்னகத்தில் உள்ள கோயில்களின் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்தத் திருத்தலங்கள் அனைத்தும் ஏதோ ஒரு நதிக்கரையில் அமைந்த தலங்களாகவே இருக்கின்றன. நதிகளிலும் தீர்த்தங்களிலும் புனித நீராடி இறைவனைத்தரிசிப்பது பக்தியின் முதல் அங்கமாகும். புனித நதிகளில் நீராடுவதற்கு மிகப் புனிதமான மாதம் ஆடி மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் புண்ணியத் துறைகளின் நீராடி, புனித தலங்களைத் தரிசித்து இறையருளுடன் கூடிய நலம் பெறுவோம்.

The post ஆடியில் (நதியில்) நீராடினால் தேடி வரும் தெய்வ அருள் appeared first on Dinakaran.

Tags : Aadi Peruku ,Nalvakku Nayakar ,S. Gokulachari ,
× RELATED முத்துக்கள் முப்பது: கால(ன்) பயம் நீக்கி ஆயுள் அதிகரிக்கும் கால பைரவர்