×

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேகதாதுவில் கர்நாடக அரசு நில அளவீடு செய்வதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மேகேதாட்டுவில் ரூ.9,000 கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல்கட்டதிட்ட வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குமாறு ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் கர்நாடக அரசு அனுமதி கோரியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக அரசு மேகேதாதுவில் அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறுகையில்:
இந்த அணை ராம்நகர் மற்றும் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் அமையவிருக்கிறது. இங்குள்ள மரங்களை கணக்கெடுக்க பந்திப்பூர், மலை மாதேஸ்வரா, பிலிகிரி ரங்கனதிட்டு, காவிரி ஆகிய வன சரணாலயங்களை சேர்ந்த 29 வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் வன பயிர்கள், வன உயிர்கள் தொடர்பான ஆய்வையும் மேற்கொள்கின்றனர். இது தவிர நில அளவீடு பணிகளும் தொடங்கப்படும். இந்த ஆய்வுப் பணிகளை 60 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

இது தொடர்பாக காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம். மேகதாதுவில் கர்நாடக அரசு நில அளவீடு செய்வதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தெரிவித்தார்.

The post மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Karnataka ,Meghadatu ,Minister Duraimurugan ,Vellore ,Tamil Nadu ,Water Resources ,Minister ,Duraimurugan ,
× RELATED அலோபதி மருத்துவத்துக்கு எதிராக...