×

ஜோதிகா சல்வார், நயன்தாரா குர்தா,பூமிகா அனார்கலி… : இது டிரெண்டிங் ஸ்டோரி

நதியா கவுன், குஷ்பு கொண்டை, ரேவதி மிடி, ஜோதிகா கிளிப், நயன்தாரா புடவை, என எப்போதுமே சினிமா நடிகர் நடிகைகள் பயன்படுத்தும் ஆடை அணிகலன்கள் அவ்வப்போது டிடெண்டாவது உண்டு. அப்படித்தான் குஷி கிளிப்பும், ஜீன்ஸ் கிளிப்பும் அன்று துவங்கி இன்றுவரையிலும் கூட அமைதியான ட்ரெண்டிங்கில் அனைத்துக் குழந்தைகளின், பெண்களின் கூந்தலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. எப்போதுமே சினிமாவும் சினிமா கலைஞர்களும் சாதாரண பொது மக்களுக்கு ஒரு மாயாஜால பிம்பம்தான். அவர்கள் பயன்படுத்தும் பொட்டு முதல் காலில் அணிந்திருக்கும் காலனி வரையிலும் கூட பார்வையாளர்கள் கூர்ந்து கவனிப்பதுண்டு. நிச்சயம் அது போன்ற ஆடை ஆபரணங்களை தாங்களும் அணிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும். இந்த சூத்திரத்தைத்தான் மிக அற்புதமாககையில் எடுத்திருக்கிறார் டிசைனர் கிருபாவாணி. இவரின் ரிகிரியேஷன் கான்செப்டில் பிரபலமான படங்கள், பாடல்கள் என எந்தெந்த உடைகள் சாதாரண பெண்களும் கூட அணிந்து தங்களை மேலும் அழகாக காட்டலாம் என அறிந்து நயன்தாரா, ஜோதிகா, அபர்ணா பாலமுரளி கிருஷ்ணன், சில்லுனு ஒரு காதல் பூமிகா, என்ன படங்களில் மாஸ் காட்டிய உடைகளை அப்படியே தத்ரூபமாக டிசைன் செய்து கொடுக்கிறார்.

‘ஒவ்வொரு டிரஸுக்கும் அந்த ஷேடுக்காக மட்டுமே பல நாட்கள் பஜார் கடைவீதிகள் தேடி இருக்கேன்’ … தேடல் தீவிரமானால் எதையும் அடையலாம் என்பதற்கு இவரின் சமூக வலைத்தள ஃபாளோயர்களே சாட்சி. ‘சொந்த ஊர் வேலூர், இப்போ சென்னையிலே இருக்கேன். என் அம்மா சுஜாதா. நான் ஒரு சிங்கிள் மதர் வளர்த்த பொண்ணு. அதனாலேயே எதிலேயும் தைரியமும் , தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தான் பட்ட கஷ்டங்களை என் பொண்ணு படக் கூடாதுன்னு சொந்தக் கால்ல நிற்கணும், அதே சமயம் தனித்துவமா நிற்கணும்ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. +2வில் பெரிய மதிப்பெண் எல்லாம் இல்லை, ஆனால் கண்டிப்பா படிக்கணும்ன்னு நினைச்சேன். ஒரு டிகிரியாவது இருக்கணும்ன்னு நினைச்சேன். எப்படியாவது ஒரு நல்ல சம்பளம், நல்ல வேலை இதெல்லாம் இருக்கணும்ன்னு தோணுச்சு. ஆனாலும் அம்மா சொன்ன எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளேயும் இதெல்லாம் பொருந்திப் போகலை. அதே போல எனக்கும் நான் யாருங்கற கேள்வி மட்டும் மண்டைக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. சின்ன வயதிலே இருந்தே எனக்கு நல்ல டிரெஸ் செய்துக்கப் பிடிக்கும். நிறைய நடிகைகள் பயன்படுத்துற உடைகளைக் கூட ஓரளவு மேட்ச் செய்து டிசைன் செய்வேன். நான் படிச்சது வுமன்ஸ் காலேஜ். என் கூட நிறைய வட இந்தியப் பெண்கள் படிச்சாங்க. அவங்கள்லாம் தொடர்ந்து எங்கே இந்த உடைகள் வாங்கறீங்க,எப்படி டிசைன் செய்யறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. சிலர் அதே டிரெஸ் எனக்கும் வேணும்ன்னு கேட்டு வாங்க ஆரம்பிச்சாங்க. சிலர் வாங்கிக் கொடுக்கவும் சொன்னாங்க’. என்னும் கிருபாவாணிக்கு அவரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்கள் கைகொடுத்துள்ளன.

‘என்கூட என் கல்லூரியிலே படிச்ச ஒரு பொண்ணு டிசைனர். அவங்க கிட்ட மாடல் சொல்லி சொல்லி ஆரம்பத்திலே டிசைன் செய்து வாங்க ஆரம்பிச்சேன். இன்னும் சில ஃபிரெண்ட்ஸ் இன்ஸ்டாகிராம் மூலமா கஸ்டமர்களே கொண்டு வரலாம்ன்னு சொன்னாங்க. எனக்கு இன்ஸ்டாகிராம் வர்றதிலே கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. சரி இதுதான் எதிர்காலம்ன்னு பலரும் சொல்லவும் அங்கே போஸ்ட் செய்யத் துவங்கினேன். அப்படியே சில பிரபல நடிகைகள் உடைகளை அந்தப் பாடல் பின்னணியிலேயே போஸ்ட் போட ஆரம்பிச்சேன். அதிலே பெஸ்ட்ன்னா ஜோதிகா மேடம் ரீல்ஸ்தான் என்னை பல ஃபாளோயர்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்துச்சு. அடிப்படையிலேயே எனக்கு ஜோதிகா மேடம் ஸ்டைலிங் ரொம்பப் பிடிக்கும். இப்போ இந்த 2கே காலத்திலும் கூட அவங்க பயன்படுத்தின உடைகள் அவ்ளோ டிரெண்டியா இருக்கும். ‘காக்க காக்க’ படத்திலே அவங்க பயன்படுத்தின அத்தனை குர்தாக்களும், புடவைகளும், சல்வார்களும் இன்னைக்குத் தேதியிலேயும் டிரெண்டிங்தான். அவங்க உடல் வாகுக்கு என்ன செட் ஆகுமோ அதை அழகா பயன்படுத்திப்பாங்க. ஓவர்டூ செய்துக்க மாட்டாங்க. எப்பவுமே சிம்பிள், கிளாஸி கேர்ள்தான். அவங்க உடைகளை ரிக்ரியேட் செய்யணும்ன்னு தோணுச்சு. ‘ ஒரு ஊரில் அழகே’ பாடல்ல அவங்க பயன் படுத்துகிற குர்தாக்கள்தான் முதல் டார்கெட், அடுத்து ஆரஞ்ச் துப்பட்டா, க்ரீம் கலர் சல்வார், தொடர்ந்து சில்லுன்னு ஒரு காதல்’ பட ‘முன்பே வா என் அன்பே’ பாடல்ல பூமிகா பின்க் நிற அனார்கலி சல்வார் பயன்படுத்தியிருப்பாங்க. அதையும்
ரிக்ரியேட் செய்தேன்.

அவ்வளவுதான் ஆர்டர்கள் குவிய ஆரம்பிச்சது. ஒரு தனியார் நிறுவனத்திலே வேலை செய்திட்டு இருந்தேன். சரியா கொரோனா, ஊரடங்குன்னு ஆரம்பிக்கவும் எனக்கும் வீட்டிலே இருந்து வேலை செய்துகொடுக்கற மாதிரியான வேலை இல்லை என்கிறதால் நிறைய நேரம் கிடைச்சது. விளைவு ஆர்டர்கள் குவிய ஆரம்பிக்க , சில ஆர்டர்களை செய்ய முடியாமல் நிறுத்திக் கூட வைச்சேன்’ என்னும் கிருபாவாணியிடம் ஆண்களுக்குஎதுவும் இல்லையா என கேள்விகள் வர அதற்கும் திட்டமிட்டிருக்கிறார். ‘நிறைய ஆண் ஃபாளோயர்கள் எங்களுக்கு ஏதும் இல்லையா, குறிப்பா விஜய்ன்னா ரிக்ரியேட் செய்யலாமேன்னு ஐடியாவே கொடுத்தாங்க. விஜய் சார் பர்த்டே வந்துச்சு. ரஞ்சிதமே பாட்டுல அவர் அணிஞ்சிருந்த கலர்ஃபுல் சட்டையை ரிக்ரீயேட் செய்தேன். அவ்வளவுதான் ஏகப்பட்ட நண்பர்கள் விலை கேட்டாங்க. சிலர் ஆர்டர் செய்தாங்க. தொடர்ந்து நயன்தாரா மேடமுடைய டிரெஸ்களுக்கும் இங்கே பெரிய ரசிகர்கள் வட்டம் உண்டு. ‘பிகில்’ படத்தின் ‘உனக்காக வாழ நினைக்கிறேன்’ பாடலில் நயன்தாரா பயன்படுத்தும் குர்தாக்களை டிசைன் செய்யவும் நிறைய வேலைக்குப் போகும் பெண்கள் ஆர்வம் காட்டினாங்க. இப்போ என்னுடைய மாஸ்டர் டெய்லர் மாலா சந்திரசேகர், மற்றும் என்னுடைய இன்ஸ்டாவுக்கு அட்மினா ஜெனிபர் பார்த்துக்கறாங்க. என்ன ஒண்ணு ஒவ்வொரு கலர் ஷேடுக்கும் சரியான நிறம் கிடைக்கற வரைக்கும் தேடணும். நிறைய கடைகள், நிறைய ஹோல்சேல் டீலர்கள் எல்லாரையும் சந்திச்சு பேசினேன். அடுத்து ‘சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி கிருஷ்ணன் மேடமுடைய புடவைகளை இப்போ நிறைய பேர் ஆர்வமா கேட்கறாங்க. காப்பி பேஸ்ட்தான் ஆனாலும் இதற்கான தேடல் பெருசு. செலிபிரிட்டி மாதிரி உடை உடுத்திக்க யார்தான் விரும்ப மாட்டாங்க. பட்ஜெட்டில் எப்படி சினிமா ஸ்டார் மாதிரி உடைகள் உடுத்தலாம் இதுதான் என்னுடைய டார்கெட். சிலர் அவங்க ரசிச்ச நடிகைகள் உடைகளையும் புகைப்படங்க, வீடியோக்கள் அனுப்பியும் கூட கேட்டு டிசைன் செய்துக்கறாங்க. தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் கிருபாவாணி.
– ஷாலினி நியூட்டன்

The post ஜோதிகா சல்வார், நயன்தாரா குர்தா,பூமிகா அனார்கலி… : இது டிரெண்டிங் ஸ்டோரி appeared first on Dinakaran.

Tags : Jyotika Salwar ,Nayantara Kurta ,Bhumika Anarkali… ,Nadia Kaun ,Khushpu Kondai ,Revathi Midi ,Jyothika Clip ,Nayanthara saree ,Jyothika Salwar ,Nayanthara Kurta ,Bhumika Anarkali ,
× RELATED தொகுதி ஒதுக்கீட்டில் மனக்கசப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா