×

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் 5 நாட்கள் தங்கி வழிபட அனுமதி

ஆலங்குளம்,ஆக.3: பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் 5 நாட்கள் தங்கி வழிபட வனத்துறை அனுமதி அளித்துள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சபாநாயகர் அப்பாவு நேற்று ஆலங்குளம் வருகை தந்தார். அப்போது அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் எம்பி ராமசுப்பு ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைப்பதற்கு எத்தனையோ சவால்கள் இருந்தன. இதை நமது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். உடனே முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்த இடத்தில் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க காரணமாக இருந்தார்.

இந்த நேரத்தில் நமது முதல்வருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குறிப்பாக ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் தங்கி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆலங்குளம் பகுதி மக்கள் கோயிலில் 5 நாட்கள் தங்கி வழிபட வனத்துறையிடம் அனுமதி பெற்று தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர். வனத்துறையும் 5 நாட்கள் அங்கு தங்கி வழிபட அனுமதி அளித்துள்ளனர்.

இதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் என்னிடம் கூறுங்கள். நான் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். இந்த அரசு அனைத்து ஆலய வழிபாட்டுக்கும் துணை நிற்கும் அரசு’ என்றார். அப்போது ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், நகர செயலாளர் நெல்சன், வக்கீல் சங்க தலைவர் ஆலடி மானா, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் தங்க செல்வம், நகர திமுக பொருளாளர் சுதந்திரராஜன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஞானபிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் 5 நாட்கள் தங்கி வழிபட அனுமதி appeared first on Dinakaran.

Tags : Karaiyaar Gorimuthu Ayanar ,Alangulam ,Forest Department ,Karaiyaram Gorimuthu Ayanar Temple ,Karaiyaar ,Sorimuthu Ayanar ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...