×

தமிழ்நாட்டில் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கப்படுகிறது விவசாயிகளுக்கு மானியத்தில் தக்காளி நாற்றுகள் வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு: விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை; தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.200ஐ தாண்டியும் விற்பனையானது. தக்காளி விலை உயர்வால், சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் முதல் தமிழ்நாட்டில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக கிலோ ரூ.90க்கு தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தக்காளி உற்பத்தியை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தக்காளி உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், விவசாயிகளுக்கு தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு வகையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் 1,500 ஹெக்டேர் பரப்பளவுக்கு விவசாயிகளுக்கு தேவையான தக்காளி நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளதால், உற்பத்தியை அதிகரித்து விலையை கட்டுப்படுத்தும் வகையில் தக்காளி சாகுபடி பரப்பளவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் தோட்டக்கலைத்துறை சார்பில் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு தக்காளி சாகுபடி செய்ய நாற்றுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி நாற்று தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை, நிலத்திற்கான சிட்டாவுடன் அருகில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து பெறலாம். ஒரு ஹெக்டேருக்கு தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு நாற்றுகள், இடுபொருட்கள், பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ஹெக்டேருக்கு தேவையான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தக்காளி நாற்றுகள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது. அந்த இடுபொருட்களை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள செலவினத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையால் விரைவில் தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தி அதிகரித்து விலையும் கட்டுக்குள் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநிலம் முழுவதும் தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி சாகுபடிக்கான பரப்பளவு 1,500 ஹெக்டேரில் இருந்து 3 ஆயிரம் ஹெக்டேராக இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பல மடங்கு சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டுகளில் 10 ஹெக்டேர் பரப்பளவுக்கு தக்காளி நாற்றுகள் உற்பத்தி செய்து வினியோகிக்கப்பட்ட நிலையில், தற்போது 150 ஹெக்டேர் பரப்பளவுக்கு தேவையான தக்காளி நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி வேலூர் அடுத்த அகரம்சேரி தோட்டக்கலை பூங்காவில் 3 லட்சம் தக்காளி நாற்றுகள் தயாராக உள்ளது.

மாவட்டம் வாரியாக தக்காளி
சாகுபடிக்கு ஒதுக்கப்பட்ட நிதி
மாவட்டம் பரப்பளவு
(ஹெக்டேர்) நிதி
ஒதுக்கீடு
தேனி 150 ரூ.30 லட்சம்
திருப்பத்தூர் 10 ரூ.30 லட்சம்
திருப்பூர் 300 ரூ.60 லட்சம்
திருநெல்வேலி 30 ரூ.6 லட்சம்
வேலூர் 150 ரூ.30 லட்சம்
கோவை 200 ரூ.40 லட்சம்
தர்மபுரி 550 ரூ.110 லட்சம்
திண்டுக்கல் 350 ரூ.70 லட்சம்
ஈரோடு 40 ரூ.8 லட்சம்
கள்ளக்குறிச்சி 40 ரூ.8 லட்சம்
கிருஷ்ணகிரி 500 ரூ.1 கோடி
மதுரை 30 ரூ.6 லட்சம்
சேலம் 350 ரூ.70 லட்சம்
தென்காசி 80 ரூ.16 லட்சம்

* 50வது நாளில் தக்காளி காய்க்கும்
வேலூர் அடுத்த அகரம்சேரி தோட்டக்கலை பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் தக்காளி நாற்றுகள் விதைத்த 4 முதல் 5வது நாளில் முளைத்துவிடுகிறது. இதை பயிரிட்ட 45வது நாளில் பூக்கள் பூத்து, 50வது நாளில் காய்க்க தொடங்கிவிடும். இதையடுத்து குறிப்பிட்ட சில நாட்களில் தக்காளி அறுவடை செய்துவிடலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கப்படுகிறது விவசாயிகளுக்கு மானியத்தில் தக்காளி நாற்றுகள் வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு: விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை; தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...