×

முதல்வர் மனோகர் லால் கட்டார் குற்றச்சாட்டு அரியானா வன்முறை திட்டமிட்ட சதி: பலி 6 ஆக அதிகரிப்பு; 116 பேர் கைது

சண்டிகர்: அரியானாவில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்ட சதி என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி உள்ளார். வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் எரித்து சூறையாடப்பட்டன.

மணிப்பூரில் 3 மாதமாக இரு இனமக்கள் இடையே வன்முறை நீடிக்கும் நிலையில், அரியானாவில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, ஆளும் பாஜ அரசு பாதுகாப்பை பலப்படுத்தியது. அரியானா போலீசாரைத் தவிர 20 கம்பெனி ஒன்றிய பாதுகாப்பு படையினர் வன்முறை பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர். இதனால் கலவரம் கட்டுக்குள் வந்திருப்பதாக மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த வன்முறையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர், பொதுமக்கள் 4 பேர் என 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதிகாரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். சமூக ஊடகங்கள் மூலமாகவும் வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவது எங்கள் பொறுப்பு’’ என்றார்.

முன்னதாக தனது டிவிட்டர் பதிவில் கட்டார், ‘அரியானாவில் நடந்த வன்முறை திட்டமிட்ட சதி. மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க வன்முறையை தூண்டி உள்ளனர். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்கள்தான் ஈடுகட்ட வேண்டும்’ என கூறி உள்ளார். நூஹ் மாவட்டத்தில் தொடர்ந்து இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நேற்றும் பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மாநில போலீஸ் டிஜிபி பி.கே.அகர்வால் கூறுகையில், ‘‘நிலைமை கட்டுக்குள் உள்ளது. குருகிராமில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பாக 41 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் பஜ்ரங் தளத்தின் மோனு மனேசர் பங்கு குறித்தும் விசாரிக்கிறோம்’’ என்றார். பசு பாதுகாவலரான மோனு மனேசர், ராஜஸ்தானைச் சேர்ந்த 2 முஸ்லிம்களை கடத்தி படுகொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர் விஸ்வ இந்து பரிஷத் யாத்திரையில் பங்கேற்பதாக இணையத்தில் வெளியான தகவல்கள் மூலம் வன்முறை பரவியது குறிப்பிடத்தக்கது.

* வெறுப்பு பேச்சு கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
அரியானா வன்முறையை தொடர்ந்து, டெல்லி என்சிஆர் பகுதியில் விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் பல்வேறு போராட்டம், கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பாட்டீ ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மாநில அரசு மற்றும் போலீஸ் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே விஎச்பி அமைப்பின் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்கள். சிசிடிவி கேமரா பொருத்துங்கள். அதே சமயம் எந்த இடத்திலும் வன்முறையை தூண்டும் வகையில் எந்த மதத்திற்கு எதிராகவும் வெறுப்பு பேச்சுகள் அறவே இடம் பெறக் கூடாது. பொதுச் சொத்தை சேதப்படுத்தக் கூடாது’’ என்ற நிபந்தனைகளை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

* டெல்லியில் திடீர் போராட்டம்
அரியானா வன்முறையை கண்டித்து, அண்டை மாநிலமான தலைநகர் டெல்லியில் நேற்று விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அவர்கள் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது அனுமன் சாலிசா பாடிய படி சென்றனர். இந்த போராட்டம் காரணமாக டெல்லியின் பல இடங்களிலும் நேற்று உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டெல்லியின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதே போல் அரியானாவை ஒட்டிய உபியின் சஹரன்பூர், சாம்லி, முசாபர்நகர் ஆகிய 3 மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மப்டியிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* விஎச்பி மீது குற்றச்சாட்டு
அரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘யாத்திரை நடத்திய விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினர் எத்தனை பேர் கூடுவார்கள் என்ற தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் சரியாக தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக வன்முறை நிகழ்ந்துள்ளது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

The post முதல்வர் மனோகர் லால் கட்டார் குற்றச்சாட்டு அரியானா வன்முறை திட்டமிட்ட சதி: பலி 6 ஆக அதிகரிப்பு; 116 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Manohar Lal Khattar ,Ariana ,Chandigarh ,Manohar ,Aryana ,Dinakaran ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...