×

திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்திற்கு 308 வயது: ஆண்டுக்கு ரூ.300 கோடி வருவாய் கிடைக்கிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வணங்கி வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்திற்கு 308 வயதாகிறது. தற்போது லட்டு பிரசாதம் ஆண்டுதோறும் தேவஸ்தானத்துக்கு ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் வழங்கி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் என்றாலே நம் நினைவுக்கு வருவது லட்டு தான். இந்த லட்டு பிரசாத விற்பனை மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுதோறும் ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுகளை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.

மேலும் லட்டுக்கு புவிசார் காப்புரிமையும் வர்த்தக முத்திரையும் தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுள்ளனர். அத்தகைய சிறப்பு மிக்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பூந்தியாக வழங்க தொடங்கி, பின்னர் லட்டு பிரசாதமானதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி நேற்றுடன் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு 308 வயதாகிறது. ஆனால் லட்டு பிரசாதம் வழங்க தொடங்கிய சரியான தேதியை யாராலும் சொல்ல முடியவில்லை. அதேபோல் லட்டு பிரசாதத்திற்கு அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டில் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட தொடங்கியதாக தேவஸ்தானத்திடம் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்திற்கு 308 வயது: ஆண்டுக்கு ரூ.300 கோடி வருவாய் கிடைக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Lattu Prasad ,Tirumala ,Lattu Prasadam ,Tirupati Eyumalayan Temple ,Tirupati ,temple ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.25 கோடி காணிக்கை