×

மட்டன் விருந்து வைத்து இலை கட்சி எல்லையை தாண்டவிடாமல் தடுத்த மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மா ங்கனி மாவட்டத்தில் நடந்த கூட்டத்துக்கு பவுன்சர்களுடன் வந்த இலை கட்சியின் மாஜி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொடநாடு பங்களாவில் நடந்த கொலையில் ஒரிஜினல் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேனிக்காரரும், குக்கர்காரரும் ஒன்றாக சேர்ந்து போராட்டத்துல குதிச்சாங்க. அதேபோல, மாங்கனி நகர்ல ஒரு பிரமாண்ட கூட்டத்தை சேர்த்து சேலம் விஐபிக்கு சொந்த ஊரிலேயே இனிமா கொடுக்க திட்டம் போட்டிருந்தாங்க. இதை எப்படியோ மோப்பம் பிடித்த சேலம்காரர் சென்னைக்கு போயிட்டாராம். தேனிக்காரரின் ஐந்து மாவட்ட செயலாளர்களில் 3 பேர் எஸ்கேப் ஆயிட்டாங்களாம். அதுல இரண்டு பேர் மட்டும் கூட்டத்தை கூட்ட, வந்தவர்களுக்கு டி.சர்ட், 200 கரன்சி கொடுத்து தொண்டர்களை அழைத்து வந்தாங்களாம். இதுல ஓரளவுக்கு தானாக சேர்ந்த கூட்டத்தினர் குக்கர் கட்சியை சேர்ந்தவங்களாம். இப்படி குறைவான ஆட்களே ஆர்ப்பாட்டத்துக்கு வந்த நிலையில, மேடையில் இடம் பிடிக்க தேனி, குக்கர்காரரின் முக்கிய தலைகள் மோதி கொண்டாங்களாம். இந்த நிலையில தான் அந்த நகைச்சுவையான நிகழ்ச்சி நடந்தது. அதாவது, சேலத்தில் தனக்கு பெரிய எதிர்ப்பு இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு தானே நினைத்து கொண்ட பெங்களூருகாரர் போரட்டத்துக்கு சொகுசு காரில், பத்து பவுன்சர்கள் பாதுகாப்புடன் வந்து இறங்கினாராம். கட்சி கூட்டத்துல ஆட்கள் இல்லை. மேடையிலும் ஆட்கள் இல்லை. இதுல யாருக்கு பயந்து பவுன்சர் படையுடன் மாங்கனி மாவட்டத்துக்கு ‘ஆங்கிலத்தில்’ பேமஸ் என்று அழைக்கக் கூடிய பெங்களூர்காரர் வந்தாரு. இவருக்கு யாரால ஆபத்து என்று இரு தரப்பு தொண்டர்களும் பேசி கொண்டார்களாம். இவர் சேலத்துக்காரரை எப்போதும் பெயரைச் சொல்லித்தான் பேசுவாரு. இதனால அவருக்கு கடும் மிரட்டல் வந்ததாக பேசிக்கிறாங்க. ஏற்கனவே இடைப்பாடியில் அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால தான் இந்த முன் ஏற்பாடாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ பேனர்ல பெயர் இல்லாததால எந்த மாவட்டத்துல நிர்வாகிங்க சண்டை போட ஆரம்பிச்சாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல தேனிக்காரர் அணியும், குக்கர் அணியும் 2 நாளைக்கு முன்னாடி ஆர்ப்பாட்டத்துல ஈடுபட்டாங்க. அப்போது தேனிக்காரர் அணியை சேர்ந்த டிஸ்ட்ரிக் செக்ரட்ரியோட போட்டோவை, பேனர்ல போடலையாம். இதைபார்த்து அதிர்ச்சியான நிர்வாகிங்க, பேனரை உடனே கழட்டுங்கன்னு மேடையிலயே காரசாரமா மோதிகிட்டாங்க. அப்புறம் அங்கிருந்த மாஜி அமைச்சர் ஒருத்தரு, மேடையில் இருந்த, ரெண்டு அணியையும் சமாதானம் செஞ்சி, இணைந்து செயல்படணும்னு அட்வைஸ் செஞ்சாரு. இதைபார்த்த நிர்வாகிங்க, என்னப்பா இது, ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை தான் தொடங்குனாங்க, அதுக்குள்ள பிரிச்சுவிட்டுருவாங்க போல என்று புலம்பியபடியே ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு போனாங்களாம்…’’ என்றார் விக்கியனந்தா.
‘‘அல்வா மாவட்டத்தில் களைகட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் லாபத்துக்காக தேனிக்காரரும், குக்கர்காரரும் இப்போது கை கோர்த்துள்ளனர். அல்வா மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அணியினரும் சேர்ந்து கூட்டம் கூடியதால், தென் மாவட்டங்களில் நம்மை மீறி இலை கட்சி ஓட்டு வாங்க முடியாது. இரு அணியினரும் ஒன்று சேர்ந்து விட்டதால் நாம் தான் பலமாக உள்ளோம். நம்மை மீறி மக்களவை தேர்தலில் என்ன நடக்கிறது என பார்ப்போம். அதற்காகதான் கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளோம். கொடநாடு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தால் சேலம்காரர் வெளியில் தலை காட்ட முடியாது என குக்கர் கட்சியினர் வெளிப்படையாக பேசினாங்களாம். இனி, நம்ம குக்கர் அடிக்கப்போகும் விசிலில் சேலம்காரர் கலகலத்து விடுவார் என்று பஞ்ச் டயலாக் பேசியபடியே கூட்டத்தை முடிச்சாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ இலை கட்சி ெதாண்டர்களுக்கு மட்டன் விருந்து வைச்சு அசர வைத்தவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் இலை கட்சியின் மாவட்ட பொறுப்பிலிருந்த ராம் என்று பெயருடையவர் அண்மையில் திண்டிவனத்தில் தாமரை கட்சி தலைவரை வைத்து விழா நடத்தியதால் இலை கட்சியிலிருந்து மாஜி அமைச்சர் பரிந்துரையின்பேரில் நீக்கப்பட்டாராம். இதனால் கடுப்பான ராம், இலை கட்சி வழங்கிய மத்திய கூட்டுறவு வங்கி பதவியை ராஜினாமா செய்தாராம். மாஜி அமைச்சரையே நான்தான் ஜெயிக்க வச்சேன், என்னையே நீக்கிவிட்டார்கள் என்று ஆவேசமாக பேட்டி கொடுத்த ராம், தனது ஆதரவாளர்களோடும், மாஜி அமைச்சரின் அதிருப்தியாளர்களுடனும் தாமரை கட்சியில் சேருவதற்கு நேரம் கேட்டிருக்கிறாராம். வனம் நகருக்கு அண்ணாமலை வரும் நடைபயணத்தில் பிரமாண்ட இணைப்பு விழாவிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். ஏற்கனவே இலை கட்சியில் சிலர் தேனி, குக்கர், சின்னமம்மி அணிக்கு சென்ற நிலையில் தாமரை கட்சியில் மிகப்பெரிய கூட்டத்தோடு சேர, இலை கட்சியில் ஆட்களை அணி சேர்த்து வருகிறார்களாம்.
இந்த அதிருப்தியை சரிசெய்யவும், கட்சியினரை தன்வசப்படுத்தவும் இலை கட்சியின் மாஜி அமைச்சரோ தன் கட்சியினர் 5 ஆயிரம் பேரை அழைத்து மட்டன் பிரியாணி போட்டு தடபுடல் விருந்து வைத்திருக்கிறாராம். மேலும் கட்சியில் பேரவை உள்ளிட்ட பல பொறுப்புகள் காலியாக இருப்பதாகவும், இதற்கு விண்ணப்பத்தை தன்னிடம் கொடுக்குமாறும் கட்சியினரை சரிகட்டி வருகிறாராம். குக்கர் கட்சியில் இருந்து திரும்பவந்த சுந்தரமானவர் பேரவை மாவட்ட பொறுப்பை என்னிடம்தான் கொடுக்க வேண்டுமென்று கண்டிஷன் போட்டுள்ளாராம். அப்படியே மட்டனை ஒரு பிடி பிடித்தாராம். மாற்றுக்கட்சிக்கு சென்றவர்களுக்கு பொறுப்பு வழங்கக்கூடாதென்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாம். ஒருவழியாக மட்டன் பிரியாணி விருந்து, கட்சி பதவி என்று ஆசைகாட்டி தற்சமயம் யாரும் வெளியே போகாத வகையில் மாஜி அமைச்சர் தடுப்பு கட்டை போட்டிருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மட்டன் விருந்து வைத்து இலை கட்சி எல்லையை தாண்டவிடாமல் தடுத்த மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mutton ,Maji minister ,leaf party ,Maji Yaru ,Ma Ngani District ,Peter Mama ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...