×

பிரமிப்பூட்டும் ஹொய்சாலர்களின் கட்டடக்கலை

அதிசயங்கள் அற்புதங்கள்!

(பேளூர்- சென்னகேசவ கோயில், ஹலபீடு – ஹொய்சாலேசுவரா கோயில்)
நுணுக்கமான சிற்பக்கலையின் சிகரம்

பல நூற்றாண்டுகளை கடந்தும் நம் முன்னோர்களின் தீரத்தையும் கலைநுணுக்கங்களையும் வரலாற்று பதிவுகளையும் இன்றளவும் பறைசாற்றுபவை அவர்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளும், கலைப் பொக்கிஷங்களான குடைவரைக் கோயில்களும், கற்கோயில்களும்தான். பார்க்கப் பார்க்க பிரமிப்பையும் ஆச்சர்யத்தையும் உண்டாக்கும் விதமாக கட்டடக்கலையில் ஈடு இணையில்லாத படைப்புகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹொய்சால மன்னர்களின் காலகட்டம் மிக‌ முக்கியமானதாகும். அதிலும் முக்கியமாக கோயிலின் கட்டடக்கலைக்காக ஹொய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூரப்படுகிறார். ஹொய்சால கட்டடக்கலை என்பது 11 மற்றும் 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஹொய்சாலப் பேரரசின் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்து கோயில் கட்டடக்கலையில் உள்ள கட்டடப் பாணியாகும். நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெருமை வாய்ந்தவை பேளூரில் உள்ள சென்னகேசவ கோயில், ஹலபீடில் உள்ள ஹொய்சாலேசுவரா கோயில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவ கோயில் ஆகியன.

போசளப் பேரரசு அல்லது ஹொய்சாலப் பேரரசு (Hoysala Empire) பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின் ஹலபீடினைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர். .ஹொய்சால மன்னன் விஷ்ணுவர்தன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் ஆழ்ந்த நம்பிக்கையால் விஷ்ணுவுக்கு கட்டியதைப் போலவே சிவனுக்கும் பல கோயில்களைக் கட்டியதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேணிக் காத்தனர் என்பதை வரலாற்று பதிவுகள் பறைசாற்றுகின்றன. அவர்கள் சமண மதத்தின் மீதான நம்பிக்கையாலும் சில சமண கோயில்களையும் கட்டினார்கள். இந்தக் கோயில்களில் பெரும்பாலானவை அவற்றின் சிற்பங்களில் பரந்த கருப்பொருள்களுடன் உலகியல் அம்சங்களைக் கொண்டுள்ளன. விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட பேளூரில் உள்ள புகழ்பெற்ற சென்னகேசவ கோயிலிலும் , சிவனுக்காக கட்டிய ஹலபீடில் உள்ள ஹொய்சாலேஸ்வரர் கோயிலிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டுக் கோயில்களைப் போலல்லாமல் வேறுபட்டு தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதோடு தென்னிந்தியாவின் மற்ற கோயில் கட்டடக்கலைகளில் இருந்தும் வேறுபடும் கட்டிடக்கலை அம்சங்களை கொண்டதாக உள்ளது. ஹொய்சாலக் கோயில்களில் உள்ள ஒரு சிறிய மூடிய மண்டபம் சந்நதிகளுக்கு செல்லும் வழக்கமான அம்சமாகும்.

பெரும்பாலும் விசாலமான திறந்த மண்டபங்களில் மண்டபத்துடன் கூடிய சந்நதிகள் உள்ளன. இங்குள்ள கூரையானது ஏராளமான தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. கோயிலும் மண்டபமும் புராணங்களை கூறும் சிற்பங்களாலும், மலர் சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கோயில்களின் தூண்கள், சுவர்கள் நுணுக்கமாகக் குடையபட்ட கற்சிற்பங்களால் நிறைந்து இந்துக் கடவுள்களைத் தாங்கியுள்ளன. இங்கு வடிக்கப்பட்டுல்ள சிற்பக்கலையும், கட்டடக் கலையும் காண்போரை பிரமிக்கச் செய்யும் என்பது திண்ணம்.

 

The post பிரமிப்பூட்டும் ஹொய்சாலர்களின் கட்டடக்கலை appeared first on Dinakaran.

Tags : Bellur- Sennekesava Temple ,Halapid ,Hoisaleshura Temple ,
× RELATED தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை: ராமதாஸ் பேட்டி