×

கைத்தறி, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கைத்தறி, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் பார்சிக்கள் போன்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் செய்யும் ஏழ்மை நிலையில் உள்ள கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகம் மூலம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த ஒன்றிய அரசின் விராசத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரம்பு 1ன் படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆண்டு வருமான வரம்பு கிராமப் புறமாயிருப்பின் ரூ.98 ஆயிரம் மற்றும் நகர்ப்புறமாயிருப்பின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருத்தல் வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் பெண்களுக்கு 4 சதவிகிதம் மற்றும் ஆண்களுக்கு 5 சதவிகிதம் கணக்கிடப்பட்டு 5 ஆண்டுக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேற்படி கைவினைக் கலைஞர்களுக்கான கடனுதவி திட்ட வரம்பு 1ன் கீழ் பயன்பெற முடியாத மற்றும் ஆண்டு வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் உள்ள கைவினை கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும்.

ஆண்டு வட்டி விகிதம் பெண்களுக்கு 5 சதவிகிதம் மற்றும் ஆண்களுக்கு 6 சதவிகிதம் கணக்கிடப்படும். 5 ஆண்டுக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும். எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியான விண்ணப்பங்கள் டாம்கோ நிறுவனத்திற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post கைத்தறி, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Alby John Varghese ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை