×

இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருவள்ளூர்: மப்பேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ரயில்வே ஊழியர் உயிரிழந்த வழக்கில் இழப்பீட்டுத்தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசிங் என்பவரின் மகன் அறிவழகன் (33). ரயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி பேரம்பாக்கத்தில் இருந்து மப்பேடு நோக்கி பைக்கில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அறிவழகன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அறிவழகன் மனைவி சித்ரா, திருவள்ளூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறிவழகன் குடும்பத்தினருக்கு ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டு தொகையை வழங்காததால், திருவள்ளூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் சித்ரா மேல்முறையீடு செய்தார். இதில் இழப்பீடு தொகைக்கு ஈடாக அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்ற ஊழியர் பரத் மற்றும் போலீசார் விபத்தில் பலியான அறிவழகனின் மனைவி சித்ரா முன்னிலையில் சென்னையில் இருந்து திருப்பதி நோக்கிச்சென்று கொண்டிருந்த பேருந்தை சிறைபிடித்து ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Mapedu ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை