×

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தால் பலம் அதிகரிக்கும்: லோகமான்ய திலகர் விருது விழாவில் பிரதமர் பேச்சு

புனே: பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டது. அதில் பேசிய பிரதமர், ‘‘நாம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தால் அது நமது பலத்தை அதிகரிக்கும்’’ என்றார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனே வந்தார். அங்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்கள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதுபோல், லோக்மான்ய திலகரின் குடும்பத்தினர் உருவாக்கிய திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளை நடத்திய விழாவில் அவர் பங்கேற்றார். 1983ம் ஆண்டு இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பாலகங்காதர திலகரின் 103வது நினைவு தினத்தையொட்டி, பிரதமருக்கு லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்ற பின்னர் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: பரஸ்பரம் அவநம்பிக்கை நிலவினால் வளர்ச்சி அடைய முடியாது.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய மக்கள் தங்கள் அரசை நம்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது சாத்தியம் ஆவதற்கு இந்திய மக்களே காரணம். நாம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தால் அது நமது பலத்தை அதிகரிக்கும். லோக்மான்ய திலகர் பத்திரிகை சுதந்திரம் பற்றி நன்கு உணர்ந்திருந்தார். சுதந்திர போராட்டதின் போக்கையே மாற்றியவர் திலகர். தெருக்களுக்கு சூட்டப்பட்ட வெளிநாட்டவர்களின் பெயரை மாற்றிவிட்டு இந்தியர்களின் பெயர்களை சூட்டினால் சிலருக்கு சங்கடம் ஏற்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடி லோக்மான்ய திலகர். இவ்வாறு பிரதமர் கூறினார். விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

The post ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தால் பலம் அதிகரிக்கும்: லோகமான்ய திலகர் விருது விழாவில் பிரதமர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Lokmanya Tilak Award Ceremony ,Pune ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...