×

வாலாஜாபாத்தில் சித்த மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் உள்ள சித்த மருத்துவமனையை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனை, ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவுலக அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு நோய் தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக, வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலத்தின் அருகாமையில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த சித்த மருத்துவமனை துவங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், மருத்துவமனையின் கட்டிடங்கள் ஆங்காங்கே சிதிலமடைந்து மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் காணப்படுகின்றன. இவைமட்டுமின்றி, இந்த மருத்துவமனை தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்பதால், இங்கு வரும் நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே, இந்த சித்த மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடமாக கட்டித்தர வேண்டும் என உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தரிடம் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, திடீரென வாலாஜாபாத் சித்த மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சுந்தர், கட்டிடம் முழுவதையும் சுற்றி பார்வையிட்டார். மேலும் இங்கு எத்தனை நோயாளிகள் நாள்தோறும் வருகின்றனர். அவர்களுக்கான சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அப்போது, புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

ஆய்வின்போது, சித்த மருத்துவர் கலைவாணி, பேரூர் திமுக செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர், துணை தலைவர் சுரேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post வாலாஜாபாத்தில் சித்த மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Siddha Hospital ,Walajabad ,Wallajahabad ,Uttaramerur ,Sundar ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் பட்டா, வீட்டுமனை வழங்க கலெக்டரிடம் கோரிக்கை