×

தீய பழக்கங்களை கற்றுத்தரும் தவறான நண்பர்களிடம் பழகாதீர்கள்: மாணவர்களுக்கு துணை கமிஷனர் அறிவுரை

பெரம்பூர்: தீய பழக்கங்களை கற்றுத்தரும் தவறான நண்பர்களிடம் பழகாதீர்கள், என்று மாணவர்களுக்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பேருந்து மற்றும் ரயில்களில் ரூட்டு தல பிரச்னையில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள முத்துக்குமாரசாமி கல்லூரியில் கொடுங்கையூர் போலீசார் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான நல்லொழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘மாணவர்கள் ஒரு லட்சியத்தை தேர்ந்தெடுத்து அதன்வழி பயணிக்க வேண்டும். தற்போது பல இடங்களில் மாணவர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து வருகிறீர்கள்.

அவ்வாறு மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில்கூட வட சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரியில் தகராறில் ஈடுபட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே படிக்கின்ற வயதில் வழக்கில் சிக்கி உங்களது எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள். கிரிமினல் வழக்கு பதியப்பட்டால் உங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தற்போது அரசு வேலை மட்டுமின்றி, தனியார் வேலைகளிலும் வெரிபிகேஷன் செய்கின்றனர். அதனால் உங்கள் மீது வழக்கு இருந்தால் தனியார் துறையில் கூட நல்ல வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்காது. எனவே, நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். தவறான நட்பு உங்களை தவறான இடத்திற்கு கொண்டு செல்லும். உடன் பழகுபவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். சிறு சிறு தவறுகள் தான் பெரிய தவறை செய்யத் தூண்டுகிறது.

மது, புகைப்பழங்கங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே, நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என இதுபோன்ற தீய பழக்கங்களில் ஈடுபட கூடாது. அவ்வாறு கூறும் நண்பர்களை தயவு செய்து விலக்கி வைத்து விடுங்கள். நீங்கள் நன்றாகப் படித்து உங்கள் எதிர்காலம், குடும்பம் மற்றும் சமூகம் உயர்வதுதான் வாழ்க்கையில் உண்மையான கெத்து. எனவே எது உண்மையான கெத்து என்பதை நீங்கள் தீர்மானம் செய்யுங்கள். செல்போனில் தவறான படங்களை பார்த்ததால் தற்போது கொடுங்கையூர் பகுதியில் 2 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நவீன தொழில்நுட்பத்தை உங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள். தவறான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்,’’ என்றார். நிகழ்ச்சியில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான போலீசார் உடன் இருந்தனர்.

திருவொற்றியூர்: மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாதவரம் ஆய்வாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் சக்திவேல் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மாநகரப் பேருந்துகளில் செல்லும்போது ரூட்டு தல பிரச்னையில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். பஸ் நிலையங்களில் பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தியுடன் வந்து தகராறு செய்து ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அவர்களின் படிப்பும், எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது,’’ என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மோகனகிருஷ்ணண், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

The post தீய பழக்கங்களை கற்றுத்தரும் தவறான நண்பர்களிடம் பழகாதீர்கள்: மாணவர்களுக்கு துணை கமிஷனர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Tamarindo ,commissioner ,Iswaran ,Dinakaran ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...