×

வழிப்பறி செய்ததாக நாடகமாடி ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த 3 பேர் கைது: ஹவாலா பணமா என விசாரணை

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை டிபிகே தெருவைச் சேர்ந்தவர் முகம்மது தமீம் (29). இவர் கம்ப்யூட்டர் டிசைனராக உள்ளார். இவரது அண்ணன் சாதிக். தனது மைத்துனர் கொடுங்கையூரில் வீடு கட்டுவதாகவும், அந்த வீடு கட்ட தேவையான பணத்தை ராயபுரம் எம்சி ரோட்டில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்யுமாறும் தம்பி முகமது தமீமிடம் சாதிக் கூறியுள்ளார். இதற்காக தமீம் மற்றும் அவரது நண்பர் இக்ரம் (34) ஆகிய இருவரும் மண்ணடியில் உள்ள கடையிலிருந்து ரூ.8.5 லட்சத்தை பைக்கில் நேற்று முன்தினம் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ராயபுரம் எம்எஸ் கோயில் தெருவில் சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 3 பேர், இவர்களை வழிமறித்து தாக்கியதாகவும், கத்தியால் வெட்ட முயன்றபோது தடுத்ததால், தனக்கு இடது கை பெருவிரலில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் கூறி ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமீம் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த ராயபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தமீம் வந்த பைக்கை பின் தொடர்ந்து எந்த பைக்கும் வந்தது போன்ற காட்சிகள் பதிவாகவில்லை.

இதனால் சந்தேகத்தின்பேரில் தொடர்ந்து தமீமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தமீம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 3 இடத்தில் இருந்து ரூ.10.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த தொகை தன்னிடமிருந்து மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக தமீம் கூறிய தொகையைவிட ரூ.2 லட்சம் அதிகமாகும். இந்த வழக்கில் முகமது தமீம், அவரது அண்ணன் சாதிக், இக்ரம் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அந்த பணம் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணமா அல்லது ஹவாலா பணமா என்பது குறித்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post வழிப்பறி செய்ததாக நாடகமாடி ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த 3 பேர் கைது: ஹவாலா பணமா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Natakadi ,Thandaiyarpet ,Mohammad Tamim ,DPK Street, Old Vannarpet ,Natakamadi ,Hawala ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...