×

சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில் திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவு கரடி நடமாட்டம்: பக்தர்கள் பீதி

திருமலை,: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அலிபிரி மலைப்பாதையில் சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில், நள்ளிரவு கரடி நடமாட்டத்தால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் நேர்த்திக்கடனாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாகவும், வாரிமெட்டு வழியாகவும் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அலிபிரி மலைப்பாதையில் உள்ள மான் பூங்கா எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு கரடி வெளியே வந்தது. அது நடைபாதையில் சிறிது தூரம் சென்றது. பின்னர் அந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்போது அவ்வழியாக வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். ஏற்கனவே கடந்த மாதம் இதே நடைபாதையில் நடந்து வந்த 4 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்றது. பக்தர்கள், போலீசார் விரட்டியதால் சிறுவனை சிறுத்தை விட்டு விட்டு சென்றது. இந்நிலையில் நள்ளிரவு நடைபாதையில் கரடி நடமாடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில் திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவு கரடி நடமாட்டம்: பக்தர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Tirupati hill ,Tirumala ,Alibiri ,Tirupati Eyumalayan temple ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை கடந்த சிறுத்தை