×

ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் சென்னை வர அனுமதிக்க கூடாது: ஆலை எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் சென்னை வருவதற்கு அனுமதிக்ககூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, மெரினாபிரபு, மகேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலை மக்களின் உடல்நலம் அனைத்தையும் அழித்து, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களின் காரணியாக அமைந்து, எங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும், வருங்காலத்தையும் அழிக்கும் என்பதால் இந்த திட்டத்தை தூத்துக்குடி மக்களாகிய நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அளித்த 215 பக்க தீர்ப்பில் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது சரியானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் ஸ்டெர்லைட்டின் இருப்பிடமே தவறு என்றும், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கொடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக், பாதரசம் உள்ளிட்ட கழிவுகள் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலக்கப்பட்டுள்ளதை ஆதாரப்பூர்வமாக புள்ளி விவரமாக சிறப்பு வாய்ந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வாழ வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்பட்டால் ஒழிய வேறு வழி இல்லை என்ற சூழலில் 2018ம் ஆண்டு 100 நாட்கள் தூத்துக்குடி குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 17 பகுதிகளில் அறவழியில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவந்தனர். இந்நிலையில் 2018ம் ஆண்டு மே மாதம் 22ம்தேதி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கச் சென்ற மக்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரை கொன்று, பல உறவுகளின் உடல் உறுப்புகளை சிதைத்தது அப்போதைய அதிமுக அரசு. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா உரிமையாளர் அனில் அகர்வால் சென்னையில் இயங்கும் ஒரு தனியார் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வருகிறார். அனில் அகர்வால் சென்னைக்கு வருவதற்கு நாம் உடன்பட முடியாது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அவரின் வருகையை கடுமையாய் எதிர்க்கிறது.

மாநிலம் தழுவிய தமிழ் மக்களின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிடுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் எங்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இதுபோன்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில தலைவர் காந்தி மள்ளர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘வேதாந்தா குழு தலைவர் அனில்அகர்வால் சென்னை வருவதற்கு எங்கள் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. அதோடு அவரது வருகையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்ககூடாது’ என்று அதில் கூறியுள்ளார்.

 

The post ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் சென்னை வர அனுமதிக்க கூடாது: ஆலை எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sterlite ,Anil Aggarwal ,Chennai ,Thoothukudi ,Anil Agarwal ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால்...