×

காஸ் கசிந்து தீப்பிடித்து 3 பேர் படுகாயம் அணைக்கட்டு அருகே பரபரப்பு டீக்கடையில் சிலிண்டர் மாற்றியபோது

அணைக்கட்டு, ஆக. 1: அணைக்கட்டு அடுத்த ஊசூரில் சிலிண்டர் மாற்றிய போது காஸ் கசிந்து டீக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அணைக்கட்டு தாலுகா ஊசூர் குளத்துமேடு அருகே அணைக்கட்டு செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பக்கத்தில் சேக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை கடை திறந்து வியாபாரம் நடந்து வந்தது. கடையில் உரிமையாளர் ரமேஷ்பாபு அவரது மகன் விக்னேஷ், டீ மாஸ்டர் அணைக்கட்டு நாராயணபுரத்தைச் சேர்ந்த பைரோஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

அப்போது காஸ் சிலிண்டர் காலியானதால் இன்னொரு சிலிண்டரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் எதிர்பாராத விதமாக காஸ் கசிந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கடையில் இருந்த ரமேஷ்பாபு அவரது மகன் விக்னேஷ், டீ மாஸ்டர் பைரேஸ் ஆகிய 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, விஏஓ அசோக் மற்றும் அரியூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதனை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

The post காஸ் கசிந்து தீப்பிடித்து 3 பேர் படுகாயம் அணைக்கட்டு அருகே பரபரப்பு டீக்கடையில் சிலிண்டர் மாற்றியபோது appeared first on Dinakaran.

Tags : Padukayam dam ,Usoor Dam ,Badugayam Dam ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில்...