×

மியான்மரை ஒட்டிய மோரே நகரில் இருந்து போலீசாரை திரும்ப பெறக்கோரி மணிப்பூர் பெண்கள் போராட்டம்: பழங்குடியின தலைவர்கள் எச்சரிக்கை

இம்பால்: மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய மோரே நகரில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள மாநில போலீஸ் படையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் சுராசந்த்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை பிரிவினரான மெய்டீஸ் மக்களுக்கும் பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டி உள்ள தெங்னவ்பால் மாவட்டத்தின் மோரே நகரில் இருந்து பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மாநில போலீஸ் படையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, சுராசந்த்பூரில் நேற்று பழங்குடியின பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஏற்கனவே கடந்த 28ம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பழங்குடியின தலைவர்கள் மன்றமான ஐடிஎல்எப் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘நியாயத்தையும், நடுநிலையையும் பராமரிக்க மோரேவிலிருந்து மாநில போலீஸ் பாதுகாப்பு படையினரை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டா, அனைத்து பழங்குடி மாவட்டங்களிலும் போராட்டத்தை நாங்கள் தொடங்குவோம். காவல்துறையில் அதிகம் பேர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே மாநில அரசின் இந்த நடவடிக்கை நடுநிலையற்றது. அவர்கள் மோரேவில் நுழைந்தால் பேரழிவு ஏற்படுத்தக் கூடும்’ என கூறி உள்ளனர்.

* சட்டவிரோத குடியேறிகள் பயோமெட்ரிக் பதிவு
மணிப்பூர் கலவரத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக பாஜ அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே, அங்கு அண்டை மாநிலமான மசோரமில் மியான்மர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண பயோமெட்ரிக் பதிவு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. மாநில அரசின் இணை செயலாளர் பீட்டர் சலாம் கூறுகையில், ‘‘இதுவரை 2,500 பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்படுகின்றன. முன்பு தொடக்கப்பட்ட இந்த பணி, மே மாதம் வன்முறை நடந்ததால் நிறுத்தப்பட்டிருந்தது’’ என்றார்.

The post மியான்மரை ஒட்டிய மோரே நகரில் இருந்து போலீசாரை திரும்ப பெறக்கோரி மணிப்பூர் பெண்கள் போராட்டம்: பழங்குடியின தலைவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Moray city ,Myanmar ,City ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...