×

தையூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாயில் மிதக்கும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: தையூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சி ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ளது. தையூர் ஊராட்சி சென்னையை ஒட்டி அமைந்துள்ளதால் புதிய குடியிருப்புகள் உருவாகி உள்ளன. மேலும், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மையம், பொறியியல் கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, தையூர் ஊராட்சியின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

8 குக்கிராமங்களை அடங்கிய தையூர் ஊராட்சியில் பெரிய அளவில் வருவாய் தரக்கூடிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லை. இதனால், புதிய மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் அங்கீகார கட்டணத்தை நம்பியே ஊராட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறது. தையூர் ஊராட்சியில் ஓஎம்ஆர் சாலையையொட்டி உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து குப்பைகள் ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்படாமல் சாலையிலேயே கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சென்று வீராணம் கால்வாய் பகுதியில் விழுந்து கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு கொசு உற்பத்தி மையமாக மாறி விட்டது.

இதனால், ஓஎம்ஆர் சாலையையும், வீராணம் சாலையையும் இணைக்கும் இடத்தில் பிரம்மாண்ட கால்வாயில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பார்க்கும்போது ஏதோ குப்பைக்கிடங்கு போல காட்சி அளிக்கிறது. இதில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்த கால்வாயை ஒட்டி வசிப்பவர்களும், கடைகளில் வேலை செய்பவர்களும் தோல் நோய் மற்றும் மூச்சுப் பிரச்னையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தையூர் ஊராட்சி நிர்வாகமும், திருப்போரூர் ஒன்றிய நிர்வாகமும், சிறப்பு நிதி ஒதுக்கி தையூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தையூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாயில் மிதக்கும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Taiyur Panchayat ,Tiruporur ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்