×

இயற்கை விவசாயம் செய்ய குழுக்களை அமைத்து பயன்பெறலாம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

திருவள்ளூர்: வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘‘திருவள்ளூர் மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்வதற்கு 200 ஹெக்டேர் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் 20 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து 20 ஹெக்டேர் பரப்பிற்கு விவசாய குழுக்களை அமைத்து இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு முழுமையாக அவர்களது விளைநிலங்களை அங்கக விவசாய நடைமுறைக்கு மாற்றும் வகையில் 3 ஆண்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் பயிற்சிகள் வழங்கப்பட்டும் மற்றும் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மேலும், பாரம்பரிய இயற்கை முறையில் விவசாயம் செய்வதை உறுதி செய்திடும் வகையில் நிலம் பயன்படுத்துதல், அங்கக விதைகள் கொள்முதல் செய்தல், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிரி அங்கக இடுபொருட்களான பஞ்சகாவ்யா, ஜீவாவமிர்தம் மற்றும் வேம்பு சார்ந்த அங்கக பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்கள் 50 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் விளை பொருட்களுக்கு அங்கக சான்றளிப்பு நடைமுறைகள் மூலம் மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் தொடர்பான தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் உழவன் செயல் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது நில உரிமை ஆவணம், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை மையத்தை அணுகி பயன்பெறலாம்.’’ என அவர் தெரிவித்துள்ளார்.

The post இயற்கை விவசாயம் செய்ய குழுக்களை அமைத்து பயன்பெறலாம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Associate ,Thiruvallur ,L. Suresh ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...