×

சரமாரி துப்பாக்கிச்சூடு; அரியானா ஊர்வலத்தில் வன்முறை; 2 பேர் பலி: 4 கார்கள் எரிப்பு-போலீஸ் வாகனம் உடைப்பு

குருகிராம்: அரியானாவின் நூஹ் என்ற இடத்தில் நடந்த மத ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் ஊர்காவல்படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். கற்கள் வீசப்பட்டு 4 கார்கள் எரிக்கப்பட்டன. அரியானா மாநிலம் குர்கான் அருகே, நூஹ் என்ற இடத்தில் நுல்ஹர் மஹாதேவ் கோயில் உள்ளது. இங்கு நேற்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகே உள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த இந்த யாத்திரை குருகிராமில் உள்ள சிவில் லைன் பகுதியில் இருந்து தொடங்கியது.

இந்த யாத்திரையை பா.ஜ மாவட்ட தலைவர் கார்கி கக்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். குர்கான்- அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்த போது கெட்லா மோட் அருகே இன்னொரு பிரிவினரால் யாத்திரை நிறுத்தப்பட்டது. இதனால் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 4 கார்கள் எரிக்கப்பட்டன. கடைகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சில போலீஸ் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அப்போது இருதரப்பினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். ஹோடல் டிஎஸ்பி சாஜன்சிங் நெற்றியில் குண்டு பாய்ந்தது. அந்த பகுதி இன்ஸ்பெக்டர் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இவர்கள் இருவர் உள்பட 8 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மாவட்டம் முழுவதும் மக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொபைல் இணைய சேவைகள் நாளை வரை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் படைள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் ஹெலிகாப்டர் மூலம் கூடுதல் படைகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* வன்முறைக்கு காரணம் என்ன?

அரியானாவில் நடந்த வன்முறைக்கு பல்லப்கரில் உள்ள பஜ்ரங் தளம் ஆர்வலரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஆட்சேபனைக்குரிய வீடியோதான் காரணம் என்பது தெரிய வந்தது. அதில், ராஜஸ்தானில் இரண்டு முஸ்லிம்களைக் கொன்ற வழக்கில் தேடப்படும் பசுக் காவலர் மோனு மானேசர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு சமூகத்தினர் ஊர்வலத்தை வழிமறித்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, அவர்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

 

 

The post சரமாரி துப்பாக்கிச்சூடு; அரியானா ஊர்வலத்தில் வன்முறை; 2 பேர் பலி: 4 கார்கள் எரிப்பு-போலீஸ் வாகனம் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Volley ,Ariana ,Nuh, Ariana ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்